வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் முதல் சோதனை ராக்கெட்!
உலகின் சக்திவாய்ந்த ராக்கெட் என்ற பெயருடன் விண்ணில் செலுத்தப்பட்ட எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் ராக்கெட், ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியிருக்கிறது. இந்த ராக்கெட்டானது கடந்த திங்கள்கிழமை மாலை விண்ணில் ஏவ முதலில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ராக்கெட்டின் பூஸ்டரில் இருந்த சில கோளாறால் ஏவப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு திட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அமெரிக்காவின் டெக்சாஸில விண்ணில் ஏவப்பட்டது ஸ்டார்ஷிப். ஏவப்பட்ட மூன்று நிமிடங்களில் ராக்கெட்டின் முதல் நிலை பூஸ்டர் அதில் இருந்து விலக வேண்டும். ஆனால், அப்படி விலகாமல் சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. ஸ்டார்ஷிப் எந்தளவு திறனுடன் இருக்கிறது என்பதை சோதனை செய்வதற்காகவே இந்த ஏவுதலை திட்டமிட்டிருந்தது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
உண்மையான திட்டம் என்ன?
இந்த ராக்கெட்டானது ஏவப்பட்டு பூமியை ஒரு முறை முழுமையாகச் சுற்றிவிட்டு, மீண்டும் பூமியில் தரையிறங்குவது தான் திட்டம் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்டார்ஷிப் ராக்கெட்டையும், அதன் பெரிய பூஸ்டர்களையும் பல முறை தனித்தனியே சோதனை செய்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். ஆனால், அவை இரண்டும் சேர்ந்து எப்படியான செயல்திறனை வெளிப்படுத்தும் என்று இதுவரை சோதனை செய்யப்பட்டதில்லை. எனவே, பூமியை முழுமையாக சுற்றிவரும் திட்டம் எதுவும் இல்லை எனவும், 234 கிமீ உயரத்தை ராக்கெட் எட்டிவிட்டு மீண்டும் ராக்கெட் பசிபிக் பெருங்கடலிலும், பூஸ்டர் கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோவிலும் விழுவது தான் திட்டமாம். "ராக்கெட்டின் செயல்திறன் எவ்வளவு இருக்கிறது என்பதை சோதனை செய்வதற்கான திட்டம் மட்டுமே" என ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்பாகவே எலான் மஸ்க் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.