254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுப்பதற்காகவே தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் பெறும் வசதி சில ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இச்சேவை நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது சில ரயில் நிலையங்களில் மட்டுமே இச்சேவை இயங்கி வருகிறது. இந்நிலையில், காத்திருக்கும் நேரம் குறைப்பதற்காக 254 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரங்களை நிறுவ தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
முக்கிய நகரங்களில் 254 தானியங்கி இயந்திரத்தை அமைக்கும் தெற்கு ரயில்வே
இவை முதற்கட்டமாக சென்னை கோட்டத்தில் 96, திருச்சி கோட்டத்தில் 12, மதுரை கோட்டத்தில் 46, சேலம் கோட்டத்தில் 12, திருவனந்தபுரம் கோட்டத்தில் 50, பாலக்காடு கோட்டத்தில் 38 என்று மொத்தம் 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளது. தற்போதைய நிலவரப்படி 99 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரங்கள் உள்ளது. இதன்படி சென்னை கோட்டத்தில் 34, திருச்சி கோட்டத்தில் 7, மதுரை கோட்டத்தில் 16, சேலம் கோட்டத்தில் 13, திருவனந்தபுரம் கோட்டத்தில் 14, பாலக்காடு கோட்டத்தில் 15 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் உள்ளது.