40 மில்லியன் விற்பனை மைல்கல்லை எட்டி சோனி PS5
சோனி நிறுவனம் கடைசியான வெளியிட்ட ப்ளே ஸ்டேஷன் 5 (PS5) கேமிங் கன்சோலானது, 40 மில்லியன் என்ற விற்பனை மைல்கல்லை எட்டி சாதனை படைத்திருப்பதாகத் அறிவித்திருக்கிறது சோனி நிறுவனம். முதன் முதலில் நவம்பர் 2020-ல் வெளியான PS5-ஆனது, ஜூலை 2021-லேயே அனைவருக்கும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது. 2021-ல் வெளியிட்ட முதல் எட்டு மாதங்களிலேயே 10 மில்லியன் என்ற விற்பனை மைல்கல்லை PS5 கேமிங் கன்சோல் எட்டியது. அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 2022-ல் 30 மில்லியன் என்ற விற்பனை மைல்கல்லை PS5 எட்டியது குறிப்பிடத்தக்கது.
சோனி PS5:
PS5 கேமிங் கன்சோலில் சுமார் 2,500 கேம்களை வழங்கி வருகிறது சோனி. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், கேமர்கள் மிகவும் விரும்பக்கூடிய பல புதிய விளையாட்டுக்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஃபைனல் ஃபேன்டசி XVI, டியாப்ளோ IV மற்றும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் 6 ஆகிய விளையாட்டுக்களை அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்னர் அந்நிறுவனம் வெளியிட்ட PS2 கேமிங் கன்சோல் 157 மில்லியன் என்ற விற்பனை அளவையும், PS4 ஆனது 117 மில்லியன் என்ற விற்பனை அளவையும் எட்டியது குறிப்பிடத்தக்கது. PS5-ன் விற்பனையை மேலும் உயர்த்தும் பொருட்டு, அதன் டிஸ்க் வேரியன்டை இந்தியாவில், ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 7 வரை ரூ.7,500 சலுகை விலையில் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது சோனி.