Slack செயலி முடக்கம்: உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த மெசேஜிங் ஆப் முடங்கியது
பிரபல பணியிட செய்தியிடல் செயலியான ஸ்லாக், உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இன்று மதியம் முடங்கியது. Slack இணையதளத்தில் பகிர்ந்த தகவலின் படி, இந்த செயலி முடங்கியதால், அதன் பயனர்களால், தகவல் பரிமாற்றங்கள், பணிப்பாய்வுகளைப் பயன்படுத்துதல் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (ஜூலை 27) மதியம் 2:30 மணியளவில் உலகளவில் பெரும்பாலான பயனர்கள், ஸ்லாக் பயன்பாட்டில் பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்தனர் என்று டவுன்டெக்டர்.காம் என்ற செயலிழப்பு கண்காணிப்பு இணையதளம் கூறுகிறது. குறிப்பாக 450 க்கும் மேற்பட்ட இந்திய பயனர்கள் சிக்கல்களை சந்திப்பதாக புகாரளித்துள்ளனர்.
பெரிய நிறுவனங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்லாக்
உலகெங்கும், பல பெரிய நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்குள்ளும், நிறுவனங்களிலும் உள்ள சக ஊழியர்களை இணைக்கவும் ஸ்லாக்கை நம்பியுள்ளன. பல நிறுவனங்கள் தற்போது WFH அல்லது ஹைபிரிட் மாடலில் பணி புரிவதால், ஸ்லாக்கின் முக்கியத்துவம் தற்போது அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும். தற்போது எழுந்துள்ள இந்த திடீர் செயலி முடக்கத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இன்றைய இந்த முடக்கத்திற்கு பிறகு, ஸ்லாக் பயனர்கள் பலருக்கும் தகவல் பரிமாற்றம் செயலிழப்பு, தகவல்களை அனுப்புவதில் தாமதம் மற்றும் ஒரு சில தகவல்கள், பலமுறை அனுப்பப்படுவது போன்றவை நேரிட்டுள்ளதாக தெரிகிறது.