பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
விண்வெளியில் நமது சூரிய குடும்பம் அமைந்திருக்கக்கூடிய பால்வெளி மண்டலத்திற்கு உள்ளேயே தோன்றிய அதிக ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். துணை அணுத்துகள்கான எலெக்ட்ரான் மற்றும் புரோட்டானைப் போல நியூட்ரினோக்களும் ஒரு தொடக்கநிலை துணை அணுத்துகளாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்தவொரு பொருளையும் தொடர்பு கொள்ளாமல் கடந்து செல்லும் ஆற்றலைக் கொண்டிருப்பவை நியூட்ரினோக்கள். எனவே, அவற்றை கண்டறிவதும் மிகவும் கடினமான செயலாகவே இருந்து வருகிறது. மின்னூட்டமற்ற, நிறையற்ற இந்த நியூட்ரினோக்கள் மிகவும் அரிதாகவே தண்ணீர் மூலக்கூறுகளோடு கலந்துறவாடும். அப்படி கலந்துறவாடும் போது, ம்யூவான்ஸ் என்ற மின்னூட்டம் கொண்ட மற்றொரு துணை அணுத்துகளை இது உருவாக்கும். இந்த கலந்துறவாடல் செயல்முறையின்போது, வெளிப்படும் வெளிச்சத்தைக் கொண்டே நியூட்ரினோ துகள்களைக் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
எதற்கு நியூட்ரினோக்களை நாம் கண்டறிய வேண்டும்:
இந்த பிரபஞ்சம் முழுவதும் இரண்டறக் கலந்திருக்கும் சில பிரபஞ்சப் பொருட்களில் முக்கியமானவே நியூட்ரினோக்கள். காஸ்மிக் கதிர்கள், கதிரியக்க சிதைவு மற்றும் சூப்பர்நோவா பெருவெடிப்பு உள்ளிட்ட சில செயல்முறைகளில் இருந்து மட்டுமே நியூட்ரினோக்கள் உருவாகின்றன. நாம் எந்த தொலைநோக்கி கொண்டும் பார்க்க முடியாத பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் நடக்கக்கூடிய பிரபஞ்ச நிகழ்வுகளில் இருந்து உருவாகும் நியூட்ரினோக்களும், அதன் சமிஞ்ஞைகளைச் சுமந்து கொண்டு நம்மை வந்து அடைந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேரண்டம் எப்படி உருவானது என்பது குறித்தும், இந்த பேரண்டத்தில் நிகழ்வுகளில் நாம் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களையும், நியூட்ரினோவைப் படிப்பதன் மூலம், அவற்றைப் புரிந்து கொள்ளவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என நம்புகின்றனர் விஞ்ஞானிகள்.