டிகிரி அப்புறம்தான்; இந்தத் திறமைதான் ஏஐ உலகில் உங்களை மதிப்புமிக்கவராக்கும்: மைக்ரோசாஃப்ட் சிஇஓ அறிவுரை
செய்தி முன்னோட்டம்
பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா, இன்று நிலையில் மிகவும் முக்கியமான திறன் 'உணர்ச்சி நுண்ணறிவு' (Emotional Intelligence) தான் என்று வலியுறுத்தியுள்ளார். இயந்திரங்கள் பகுப்பாய்வுப் பணிகளைக் கையாளும் நிலையில், மனிதர்களுக்கு இடையேயான பரிவு (Empathy), ஒத்துழைப்பு மற்றும் மனிதத் தொடர்பு ஆகியவையே ஒருவரின் மதிப்பைத் தீர்மானிக்கும் என்று அவர் கூறினார்.
அறிவு
அறிவாற்றல் மட்டும் போதாது
சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய சத்யா நாதெள்ளா, தொழில்நுட்ப அறிவாற்றல் (IQ) மட்டுமே ஒரு தலைவரைச் சிறந்து விளங்க வைக்காது என்று தெளிவுபடுத்தினார். இயந்திரங்கள் அதிக வேலைகளைச் செய்யத் தொடங்குவதால், மனிதர்களின் உள்ளார்ந்த திறனான உணர்ச்சி நுண்ணறிவில் தான் உண்மையான அதிகாரம் இருக்கும் என்றார். அறிவாற்றல் முக்கியம் என்றாலும், உணர்ச்சிசார் விழிப்புணர்வு இல்லாதவர்கள் தங்கள் முழுத் திறனைப் பயன்படுத்தத் தவறிவிடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். மனிதர்களைப் புரிந்து கொள்வது, உறவுகளை நிர்வகிப்பது மற்றும் உணர்ச்சிகளைச் சமாளிப்பது ஆகியவை ஏஐயை மையமாகக் கொண்ட உலகில் அத்தியாவசியத் தலைமைப் பண்புகளாக மாறி வருகின்றன.
ஒத்துழைப்பு
பரிவும் ஒத்துழைப்பும் அவசியம்
பரிவு என்பது வெறும் ஒரு 'மென் திறன்' அல்ல, அது ஒரு முக்கியமான வணிகத் திறன் என்று நாதெள்ளா மீண்டும் வலியுறுத்தினார். ஏஐ செயல்பாட்டு மற்றும் பகுப்பாய்வுப் பொறுப்புகளை எடுத்துக் கொள்ளும்போது, ஒத்துழைப்பு மற்றும் மனிதப் பரிவு ஆகியவை நிறுவனங்களின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றும். மைக்ரோசாஃப்ட் இப்போது 'எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும்' (Learn-it-all) மனப்பான்மையை ஊக்குவித்து, ஊழியர்களை வளர்ச்சி மனப்பான்மையுடன் இருக்கத் தூண்டுவதன் மூலம் எதிர்காலப் பணிகளுக்குத் தயார்படுத்துகிறது. ஏஐ தர்க்கம் மற்றும் தரவுகளில் சிறந்து விளங்கினாலும், மனிதர்களை இணைக்கும், புரிந்து கொள்ளும் மற்றும் ஒத்துழைக்கும் தனித்துவமான திறன்களே இனி வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.