ட்விட்டர் (X) தலைமையகக் கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய 'X' லோகோ
ட்விட்டரின் பெயரை சில நாட்களுக்கு முன்பு X என மாற்றினார் எலான் மஸ்க். புதிய பெயரை மாற்றிய அன்றே, அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் தலைமையக கட்டிடத்தின் மீது X வடிவிலான மின்விளக்குகளுடன் கூடிய அமைப்பை நிறுவியிருக்கிறது அந்நிறுவனம். இரவில் அதிக ஒளியை உமிழும் தன்மை கொண்ட இந்த X அமைப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின்விளக்குகளால் தங்களது தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக, ட்விட்டர் அலுவலகத்தின் அருகில் வாழும் நகர வாசிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இது குறித்து சான் ஃபிரான்சிஸ்கோ நகர கட்டிட ஆய்வுத் துறையிடம் அவர்கள் புகாரும் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையில், ட்விட்டர் அலுவலகத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும் X லோகோவை ஆய்வு செய்யவிருக்கின்றனர்.
அதிருப்தியில் சான் ஃபிரான்சிஸ்கோ நகரவாசிகள்:
தங்கள் நகர ட்விட்டர் அலுவலகக் கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் இந்த X லோகோவை பலரும் புகைப்படம் மற்றும் காணொளியாகப் பதிவு செய்து, ட்விட்டர் தளத்திலும் பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அந்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பேசும் போது, "இது போன்று பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கும் அமைப்புகளை நிராகரிக்கவோ அப்பகுதி மக்களுக்கு உரிமை உள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார். கட்டிட ஆய்வுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்யச் சென்ற போது, அவர்களை இருமுறை கட்டிடத்தின் மேற்பகுதிக்கு அனுமதிக்காமல் X (ட்விட்டர்) அதிகாரி தடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பானது தற்காலிகமாகவே வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.