அமெரிக்காவிற்கு பேராபத்து! சான் ஆண்ட்ரியாஸ் பிளவில் 1000 ஆண்டுகளில் இல்லாத அழுத்தம்! எந்த நேரத்திலும் மெகா நிலநடுக்கம் ஏற்படலாம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை உலுக்கவிருக்கும் தி பிக் ஒன் (The Big One) எனப்படும் பேரழிவு நிலநடுக்கம் குறித்த அச்சம் தற்பொழுது விஞ்ஞானிகளின் புதிய அதிர்ச்சி ஆய்வின் மூலம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஹவாய் பல்கலைக்கழகத்தின் பூகோள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இணைந்து நடத்திய புதிய ஆய்வின்படி, தெற்கு கலிபோர்னியாவின் ஆபத்தான சான் ஆண்ட்ரியாஸ் மற்றும் அதன் அண்டை பிளவான சான் ஜாசிண்டோ ஆகிய இரண்டு முக்கிய நிலநடுக்கப் பிளவுப் பகுதிகளில், கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக உச்சக்கட்ட டெக்டோனிக் பாறை அழுத்தம் குவிந்துள்ளதை அதிநவீன கணினி மாதிரிகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
4D கணினி மாடல்
1000 ஆண்டுகால பூகம்ப வரலாற்றை வெளிப்படுத்திய 4D கணினி மாடல்
இந்தத் திகைப்பூட்டும் கண்டுபிடிப்புகள் ஜர்னல் ஆஃப் ஜியோபிசிகல் ரிசர்ச் என்ற அறிவியல் இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், பெர்ன் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளருமான டாக்டர் லிலியன் பர்ஹார்ட் தலைமையிலான குழு, கடந்த ஆயிரம் ஆண்டுகால கலிபோர்னியாவின் பூகம்ப வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்து இந்த 4D கணினி மாதிரியை உருவாக்கியுள்ளது. ரேடியோகார்பன் டேட்டிங், மரங்களின் வளையங்கள் மற்றும் பழங்கால வண்டல் படிவுகளின் இடப்பெயர்வு போன்ற புவியியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆபத்தான அழுத்தக் குவிப்பு துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
பூகம்ப வாசல்
காஜோன் பாஸ் எனப்படும் ஆபத்தான பூகம்ப வாசல்
இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டும் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான பகுதி காஜோன் பாஸ் என்ற சந்திப்பாகும். சான் ஆண்ட்ரியாஸ் மற்றும் சான் ஜாசிண்டோ ஆகிய இரண்டு பெரும் பிளவுகளும் ஒன்றையொன்று மிக நெருக்கமாகச் சந்திக்கும் இந்த இடத்தை விஞ்ஞானிகள் பூகம்ப வாசல் என்று அழைக்கிறார்கள். இந்த பூகம்ப வாசல் என்பது ஒரு பிளவில் ஏற்படும் நிலநடுக்க அதிர்வுகளை அடுத்த பிளவுக்குக் கடத்தாமல் தடுக்கும் ஒரு தடுப்புச் சுவராகவும் செயல்படலாம் அல்லது ஒரே நேரத்தில் இரண்டு பிளவுகளையும் இணைத்து ஒரு மிகப்பெரிய தொடர் சங்கிலிப் பேரழிவு நிலநடுக்கத்தை உருவாக்கும் நுழைவாயிலாகவும் மாறலாம்.
பேராபத்து
இரண்டு பிளவுகளும் ஒரே நேரத்தில் உடைந்தால் ஏற்படும் பேராபத்து
தற்போதைய நிலவரப்படி, சான் ஜாசிண்டோ பகுதியில் பாறை அழுத்தமானது 3.6 மெகாபாஸ்கல் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. அதே சமயம் சான் ஆண்ட்ரியாஸின் அண்டைப்பகுதி 2.8 மெகாபாஸ்கல் அழுத்தத்தில் உள்ளது. இந்த இரண்டு பிளவுகளின் அழுத்த நிலைகளும் தற்பொழுது அபாயகரமான முறையில் நேர்க்கோட்டில் ஒரே சீராக அமைந்துள்ளன. இதனால், ஏதேனும் ஒரு பிளவில் நிலநடுக்கம் தொடங்கினாலும், அது காஜோன் பாஸ் என்ற பூகம்ப வாசலைத் திறந்து, இரண்டு பிளவுகளையும் ஒரே நேரத்தில் உடைத்து மிகக் கொடூரமான 7.9 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவிலான மெகா நிலநடுக்கத்தை நொடியில் தோற்றுவிக்கும் சாதகமான சூழல் நிலவுகிறது.
விஞ்ஞானிகள் விளக்கம்
மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து
இந்த தெற்கு சான் ஆண்ட்ரியாஸ் பிளவுப் பகுதியில் கடைசியாகக் கடந்த 1857 ஆம் ஆண்டுதான் மிகப்பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் 160 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி முற்றிலும் அமைதியாகக் காணப்படுவதால், இயற்கையாக வெளியேறியிருக்க வேண்டிய ஆற்றல் அனைத்தும் பூமிக்கு அடியில் கிரிட்டிக்கல் லோடிங் எனப்படும் வெடிக்கும் நிலையில் தேங்கியுள்ளது. இந்த மெகா நிலநடுக்கம் நிகழும்பட்சத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பெர்னார்டினோ, ரிவர்சைடு மற்றும் கோச்செல்லா பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள் மற்றும் அங்குள்ள மின்சாரம், எரிசக்தி, குடிநீர் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது பூகம்பத்தைக் கணிப்பதற்கல்ல என்றும், அவசரகாலத் திட்டமிடலுக்கான எச்சரிக்கை மட்டுமே என்றும் லிலியன் பர்ஹார்ட் தெளிவுபடுத்தியுள்ளார்.