சாம்சங் S23 FE ஸ்மார்ட்போன், என்னென்ன வசதிகளுடன் வெளியாகலாம்?
தங்களுடைய ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சீரிஸான கேலக்ஸி S23 சீரிஸை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது சாம்சங். எப்போதும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சீரிஸின் வெளியீட்டிற்குப் பிறகு, அதனை விட குறைந்த வசதிகளைக் கொண்ட FE ஸ்மார்ட்போன் ஒன்றை சாம்சங் வெளியிடுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி S22 சீரிஸைத் தொடர்ந்து, அதன் குறைந்த விலை FE வெர்ஷனை அந்நிறுவனம் வெளியிடவில்லை. தற்போது, மீண்டும் S23 சீரிஸின் குறைந்த விலை மாடாலாக கேலக்ஸி S23 FE மாடலை அந்நிறுவம் வெளியிடலாம் என கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் கசிந்து வருகிறது. தற்போது, அந்த ஸ்மார்ட்போன் குறித்த பிற தகவல்களும் இணையத்தில் கசிந்திருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி S23 FE: என்ன எதிர்பார்க்கலாம்?
120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.3 இன்ச் OLED டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13, 4370mAh பேட்டரி, 8GB ரேம் ஆப்ஷன், 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் புதிய S23 FE மாடலை சாம்சங் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா வகையில், பின்பக்கம் 50MP+ 12MP+ 8MP ரியர் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 10MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த FE மாடலில் மூன்று விதமான சிப்செட்களை சாம்சங்கள் நிறுவனம் பயன்படுத்தலாம் என முன்பே தகவல் வெளியாகியிருந்தது. இந்தியாவிற்கு ஸ்னாப்டிராகனா, எக்ஸினோஸா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த புதிய S23 FE ஸ்மார்ட்போனை, 50,000 ரூபாய்க்கும் மேலான விலையிலேயே அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.