இன்றைய 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வில் வெளியாகவிருக்கிறது சாம்சங்கின் ஃப்ளாக்ஷிப் டேப்லட்
சாம்சங் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக எதிர்பார்த்து வரும் 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வு இன்று மாலை 4.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது. இன்றைய நிகழ்வின் பிரதான வெளியீடாக இருக்கப் போவது, சாம்சங்கின் புதிய ஃபோல்டு மற்றும் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்கள் தான். ஆனால், அதனைத் தவிர்த்து இன்னும் சில சாதனங்களையும் இன்றைய வெளியீட்டுப் பட்டியலில் வைத்திருக்கிறது சாம்சங். ஃபோல்டு மற்றும் ஃப்ளிப் போன்களைத் தவிர்த்து, இரண்டாவது பிரதான வெளியீடாகப் பார்க்கப்படுவது அந்நிறுவனத்தின் புதிய S9 சீரிஸ் டேப்லட்களைத் தான். இதனைத் தவிர்த்து கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ், கேலக்ஸி பட்ஸ் 3 ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்கள் ஆகிய சாதனங்களையும் இன்றைய கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் வெளியிடவிருக்கிறது சாம்சங்.
சாம்சங் கேலக்ஸி டேப் 9 அல்ட்ரா 5G:
இணையத்தில் கசிந்த தகவல்களின் படி, இன்று வெளியிடப்படவிருக்கும் S9 அல்ட்ரா தான் சாம்சங்கின் ப்ளாக்ஷிப் டேப்லட்டாக இருக்கப் போகிறது. ஒரு சிறிய லேப்டாப்பின் அளவில் 14.6-இன்ச் AMOLED டிஸ்பிளேவை புதிய S9 அல்ட்ரா டேப்லட்டிற்குக் கொடுக்கவிருக்கிறது சாம்சங். இந்த S9 அல்ட்ராவில், குவால்காமின் தற்போதைய ஃப்ளாக்ஷிப் சிப்பான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்பைப் பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். மேலும், 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதியுடன் புதிய சாதனத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. பின்பக்கம் 12MP+8MP டூயல் கேமரா செட்டப்பையும், முன்பக்கம் 13MP கேமரவையும் புதிய S9 அல்ட்ரா டேப்லட்டில் சாம்சங் கொடுத்திருப்பதாகத் தகவல். 11,200mAh பேட்டரியுடன், டூயல் சிம் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளியாகவிருக்கிறது S9 அல்ட்ரா.