புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி M34-ஐ வெளியிட்டது சாம்சங்
இந்தியாவில் பட்ஜெட் செக்மெண்டில் தங்களுடைய கேலக்ஸி M34 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங். கடந்த ஆண்டு வெளியான M33-யின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது சாம்சங்கின் இந்த புதிய M34. 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் கொண்ட 6.5 இன்ச் Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறுத M34. இந்த டிஸ்பிளேவிற்கு கொரில்லா கிளாஸ் 5-வையும் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். புதிய M34-ன் பின்பக்கம், 50MP +8MP +2MP ட்ரிபிள் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 13MP கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை 15 முதல் தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் தளங்களின் மூலம் M34-ன் விற்பனையைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது சாம்சங்.
சாம்சங் கேலக்ஸி M34: ப்ராசஸர் மற்றும் விலை
இந்த புதிய M34-ல் தங்களுடைய சொந்த ப்ராசஸரான 5nm எக்ஸினோஸ் 1280 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். 8GB மற்றும் 6GB ஆகிய இரண்டு ரேம் தேர்வுகளுடனும் மற்றும் 128GB என்ற ஒரேயொரு ஸ்டோரேஜ் தேர்வுடனும் வெளியாகியிருக்கிரது M34. மிக முக்கியமாக, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய, 6000mAh பேட்டரியை இந்த புதிய M34-ல் பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். ஒரு முறை சார்ஜ் செய்தாலே இரண்டு நாட்கள் வரை பயன்படுத்த முடியும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து தெரிவித்திருக்கிறது சாம்சங் நிறுவனம். இந்த M34-ன் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட் ரூ.20,999 விலையிலும், 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட் ரூ.18,999 விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.