இந்தியாவில் வெளியானது புதிய 'சாம்சங் கேலக்ஸி A05s' பட்ஜெட் ஸ்மார்ட்போன்
இந்தியாவில் தங்களுடைய பட்ஜெட் விலையிலான 'A' சீரிஸில், 'கேலக்ஸி A05s' என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங். என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது 'கேலக்ஸி A05s'? 6.7 இன்ச் LCD திரை, ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன்யுஐ 5.1 இயங்குதளம், பக்கவாட்டு கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி ஆகியவற்றை இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் கொடுத்திருக்கிறது சாம்சங். பின்பக்கம் 50MP முதன்மை கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் என ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்பக்கம் 13MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இந்த A05s-ன், 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரேயொரு வேரியன்டை மட்டுமே வெளியிட்டிருக்கிறது சாம்சங்.
சாம்சங் கேலக்ஸி A05s: ப்ராசஸர் மற்றும் விலை
இந்தப் புதிய A05s-ல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ப்ராசஸரைக் கொடுத்திருக்கிறது சாம்சங். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்டும், நான்கு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்டும் வழங்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்காக, 4G, வை-பை, ப்ளூடூத் 5.1, டைப்-சி மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இதன் ஒரேயொரு 6GB/128GB வேரியன்டானது, ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. ஆன்லைன் ஸ்டோர்களில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனை மூலம் இந்த மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.