புதிய கேமரா சென்சார்களை உருவாக்கி வரும் சாம்சங்
புதிய மேம்படுத்தப்பட்ட கேமரா சென்சார்களை சாம்சங் நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸான் S23 சீரிஸில் 200MP கேமராக்களைப் பயன்படுத்தியிருந்தது சாம்சங். தற்போது அதனை விட மேம்பட்ட, 440MP சென்சார்களை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 50MP GN6, 200MP HP7 மற்றும் 440MP HU1 ஆகிய சென்சார்களை சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் நிலையில், 2024-ம் ஆண்டிற் பிற்பாதியில் இந்தப் புதிய சென்சார்களின் தயாரிப்பை அந்நிறுவனம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50MP GN6 சென்சாரை, சோனியின் IMX 989 கேமரா சென்சாருடன் போட்டியிடும் வகையில் உருவாக்கவிருக்கிறது சாம்சங்.
சாம்சங்கின் புதிய கேமரா சென்சார்கள்:
சோனியின் IMX 989 கேமரா சென்சாரானது, ஏற்கனவே ஓப்போ ஃபைண்டு X6 ப்ரோ, ஷாவ்மி 13 ப்ரோ, விவோ X90 ப்ரோ+ மற்றும் ஷாவ்மி 12S அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வருவகிறது. தற்போது உருவாக்கி வரும் சென்சார்களில் 200MP HP7 சென்சாரை தங்களுடைய S25 சீரிஸில் பயன்படுத்தத் திட்டமிட்ட சாம்சங், பின்னர் அதன் அதீத விலை காரணமாக பின்வாங்கியிருக்கிறது. ஆனால், தங்களுடைய S26 சீரிஸில் பயன்படுத்தும் வகையில் 320MP சென்சார் ஒன்றை சாம்சங் நிறுவனம் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய ஒரு சென்சாரை மட்டும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் அந்நிறுவனம் பயன்படுத்தவிருக்கும் நிலையில், பிற சென்சார்களை சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு வழங்கவிருக்கிறது சாம்சங்.