தங்கள் ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்தது சாம்சங்!
சாம்சங் நிறுவனம் வேலை செய்யும் இடத்தில் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஜெனரேட்டிவ் AI கருவிகளைப் பயன்படுத்த தங்கள் ஊழியர்களுக்கு தடை விதித்திருக்கிறது. இது குறித்து ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அந்த அறிவிப்பில், அலுவலக வேலைகளுக்குப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் கணினி ஆகியவற்றில் AI கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். மேலும், ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட சாதனங்களில் AI-யை பயன்படுத்தினாலும், அவற்றில் அலுவலக வேலை சார்ந்த தகவல்கள் எதையும் அளிக்க வேண்டாம் என சாம்சங் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த விதிமுறைகளை மீறும் ஊழியர்கள் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்திருக்கிறது அந்நிறுவனம். தகவல் பாதுகாப்பு காரணங்களைக் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தங்கள் அறிவிப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
AI கருவிகளுக்குத் தடை:
AI கருவிகளில் ஊழியர்கள் வழங்கும் தகவல்கள் நிறுவனத்திற்கு வெளியே இருக்கும் வேறு நிறுவனங்களின் சர்வர்களில் சேமிக்கப்படுகின்றன. இதனால், தங்கள் நிறுவனத்தின் தகவல்கள் வெளியே கசிவதற்கோ அல்லது திருடப்படுவதற்கோ வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது சாம்சங். சாம்சங் மட்டுமல்ல, ஜேபி மோர்கன்சேஸ் வங்கி, பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சிட்டிக்ரூப் ஆகிய நிறுவனங்களும் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ AI சாட்பாட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்திருக்கின்றன. மேலும், ஊழியர்கள் பயன்படுத்துவதற்கான சில AI கருவிகளை தாங்களே உருவாக்கி வருவதாகவும், ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்து வருவதாகவும், அதுவரை AI கருவிகளை பயன்படுத்துவதை தடை செய்வதகாவும் குறிப்பிட்டிருக்கிறது சாம்சங்.