ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் சாம் ஆல்ட்மேன்
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் துணை நிறுவனரான சாம் ஆல்ட்மேனை, தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து நீக்கியிருக்கிறது அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு. ஓபன்ஏஐ நிறுவனத்தை தொடர்ந்து சாம் ஆல்ட்மேன் வழிநடத்துவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறி இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு. சாம் ஆல்ட்மேனின் நீக்கத்தைத் தொடர்ந்து, ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டு வந்த மிரா முராட்டி அந்நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகத் தற்போது பொறுப்பேற்றிருக்கிறார். ஓபன்ஏஐ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது தனக்கு மிகவும் பெருமையான தருணமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் மிரா முராட்டி.
ஓபன்ஏஐ மற்றும் மைக்ரோசாஃப்டுடனான ஒப்பந்தம்:
ஓபன்ஏஐ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தே தங்களது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகளையும் மேம்படுத்தி வருகிறது மைக்ரோசாஃப்ட். இந்நிலையில், சாம் ஆல்ட்மேனின் நீக்கம் ஓபன்ஏஐ நிறுவனத்துடனான மைக்ரோசாஃப்டின் ஒப்பந்தத்தைப் பாதிக்காது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் மைக்ரோசாஃப்டின் சிஇஐ சத்யா நாதெல்லா. 2015-ல் எலான் மஸ்க் மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் உள்ளிட்ட பலராலும் ஓபன்ஏஐ நிறுவனம் தொடங்கப்பட்ட போதிருந்தே அந்நிறுவனத்தின் முகமாக இருந்தவர் சாம் ஆல்ட்மேன். அடுத்த புதிய நிரந்தர தலைமை செயல் அதிகாரியாக ஓபன்ஏஐ நிறுவனம் யாரை நியமிக்கப் போகிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்