ரஷ்யாவின் லூனா 25யில் ஏற்பட்ட கோளாறு, திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்குமா?
சந்திரயான் 3யுடன் சேர்த்து, தற்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் லூனா 25-ல் எதிர்பாராத கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது ரஷ்யாவின் விண்வெளி அமைப்பான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos). சந்திரயான் 3யானது வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், லூனா 25வை நாளை (ஆகஸ்ட் 21) நிலவில் தரையிறக்கத் திட்டமிட்டிருக்கிறது ரஷ்யா. நேற்று மாலை இந்திய நேரப்படி 4.40 மணியளவில் (ரஷ்ய நேரப்படி நண்பகல் 2.10 மணி), லூனா 25யின் சுற்று வட்டப்பாதையின் உயரத்தைக் குறைக்கும் கடைசி டீபூஸ்டிங் நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்திருக்கிறது ரஷ்யா. ஆனால், சில காரணங்களால் லூனா 25க்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள் நிறைவேற்றப்படாமல், டீபூஸ்டிங் செயல்பாடு தோல்வியில் முடிந்திருக்கிறது.
ரஷ்யா லூனா 25: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
இதனைத் தொடர்ந்து, என்ன விதமான கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது ரஷ்யா. உக்ரைனின் மீது போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்யாவின் மீது உலக நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்திருக்கின்றன. தற்போது ரஷ்யாவின் லூனா 25 விண்கலத்தில் இந்தக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தங்களது விண்கலத்துடனான தொடர்பை ரஷ்ய விண்வெளி அமைப்பு இழந்திருப்பதாக சில மேற்கத்திய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும், தற்போது இந்தக் கோளாறு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, நாளை திட்டமிட்டபடி லூனா 25 நிலவில் தரையிறங்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்தச் சிக்கலை ரஷ்யா எவ்வாறு கையாளவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.