இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி?
கடந்த ஆகஸ்ட் 23ம் நாள் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3யை தரையிறக்கியதன் மூலம், நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா. இந்தத் தரையிறக்கத்திற்கு தமிழக விஞ்ஞானிகளின் பங்களிப்பைத் தவிர்த்து தமிழகத்தின் மாவட்டம் ஒன்றும் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறது. சந்திரயான் திட்டங்களின் தரையிறக்கத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான சோதனை முயற்சிகளின் போது நிலவின் மேற்பரப்பில் இருப்பது போலான தரைப்பரப்பை பூமியில் உருவாக்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள். அதற்காக நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மணலை அமெரிக்காவிடமிருந்து விலை கொடுத்து வாங்கியிருக்கிறது இஸ்ரோ. சுமார் 10 கிலோ மணலை கிலோ 150 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,000) விலையில் வாங்கியிருக்கிறது இஸ்ரோ.
தமிழக மாவட்டத்தின் பங்கு:
ஆனால், தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் 60 முதல் 70 கிலோ மணலாவது இஸ்ரோவிற்கு தேவைப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான், நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய சில கிராமங்களில், நிலவின் மணலை ஒத்த பண்புகளை உடைய மணல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கக்கூடிய சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை கிராமங்களிலிருந்து சந்திரயான் திட்டங்களுக்குத் தேவையான மணலை உரிய அனுமதி பெற்று எடுத்திருக்கின்றனர். பின்னர் இந்த மணலை நிலவின் மணல் மாதிரியைப் போல உருவாக்கி, அதனைக் கொண்ட பூமியில் சந்திரயான் திட்டங்களுக்கான சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்திருக்கிறது இஸ்ரோ.
ஏன் நாமக்கல் மாவட்டத்திலிருக்கும் மணலைப் பயன்படுத்தினார்கள்?
ஏன் நிலவுத் திட்டத்திற்கான முன்னோட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்களிலிருந்து எடுக்கப்பட்ட மணலைப் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெரியார் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். நிலவில், குறிப்பாக அதன் தென் துருவப் பகுதியில் இருக்கும் மணலானது ஆனார்த்தோசைட் (Anorthosite) வகையைச் சேர்ந்தது. இந்த வகை மணலானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட பாறைகளால் ஆனது. மேலும், அதீத பிரதிபலிப்புத் தன்மையைக் கொண்டது. நாமக்கல் மாவட்ட கிராமங்களில் உள்ள மணலும் கிட்டத்தட்ட இதே பண்புகளையே கொண்டிருந்திருக்கிறது. எனவே, அவற்றை நிலவின் மணல் போலத் தயாரித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும், இந்த மணல் தயாரிப்பு முறைக்கு 2020-ம் ஆண்டிலேயே இஸ்ரோ காப்புரிமையையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.