புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு யுபிஐ சேவை மேம்படுத்தவிருக்கும் RBI
ஆகஸ்ட்-8 முதல் நடைபெற்று வந்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று அறிவித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த்தாஸ். அந்த அறிவிப்பில், இந்தியாவில் யுபிஐ சேவை சந்திக்கவிருக்கும் மாற்றங்களைக் குறித்து அவர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையாகப் பயன்படுத்தப்பட்டு வரும் யுபிஐ சேவையை பல முன்னணி தொழில்நுட்பங்களின் உதவியுடன் மேம்படுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் அவர். 'Conversational Payment' என்ற புதிய வசதியை யுபிஐ சேவையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அவர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் சாட் செய்து அதன் மூலம் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில் இந்தப் புதிய வசதி வடிவமைக்கப்படவிருக்கிறது. மேலும், இந்தப் புதிய வசதியானது ஸ்மார்ட்போன் மற்றும் ப்யூச்சர் போன் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தப்படும் வகையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
புதிய வசதிகளைப் பெறும் யுபிஐ லைட் சேவை:
இணைய வசதி இல்லாத இடங்களில் பயன்படுத்தும் வகையிலும், யுபிஐயின் மூலம் பணப்பரிவர்த்தனையின் தோல்வி சதவிகிதத்தைக் குறைக்கும் வகையிலும் யுபிஐ லைட் வசதியை அறிமுகப்படுத்தியது NPCI. யுபிஐ லைட் மூலம் ஆஃப்லைன் மோடில் அதிகபட்சமாக ரூ.200 மதிப்பு வரையிலான பணப்பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள முடியும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த யுபிஐ லைட் சேவையின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், NFC தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையிலான புதிய வசதியை யுபிஐ லைட் சேவையில் அறிமுகப்படுத்தவிருப்பதாக இன்றைய அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார் அவர். இதன் மூலம், PoS மெஷின் மேல் ஸ்மார்ட்போனை தொடுவதன் மூலமே யுபிஐ லைட் வசதியைக் கொண்டு பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.