புதிய 'ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3' சிப்செட்டை வெளியிட்ட குவால்காம்
செய்தி முன்னோட்டம்
மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட புதிய 'ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3' சிப்செட்டை எந்தவொரு முன்னறிவிப்புமின்றி தற்போது வெளியிட்டிருக்கிறது குவால்காம்.
ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான தங்களுடைய ஃப்ளாக்ஷிப்பான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை கடந்த மாதம் குவால்காம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மிட் ரேஞ்சு ஸ்மார்ட்போன்களுக்கான மேம்படுத்தப்பட்ட சிப்பாக புதிய ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்பை வெளியிட்டிருக்கிறது குவால்காம்.
TSMC-யின் 4nm தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிப்பானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்பை விட 15% அதிக CPU செயல்சதிறனையும்,. 50% அதிக GPU செயல்திறனையும் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது குவால்காம்.
குவால்காம்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3:
செயல்திறன் மேம்பாடு மட்டுமின்றி, புதிய ஜென் 3 சிப்பானது 20% கூடுதல் ஆற்றல் திறனையும் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது குவால்காம்.
குவால்காமின் ஃப்ளாக்ஷிப்பான '8 ஜென் 3'-யைப் போலவே, இந்த '7 ஜென் 3'-யையும் AI கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் ஸ்மார்ட்போனிலேயே பயன்படுத்தும் வகையில் உருவாக்கியிருக்கிறது அந்நிறுவனம்.
சிறந்த ஹார்டுவேர்களைப் பெறும் ஸ்மார்ட்போன்களில், இந்தப் புதிய சிப்பின் மேம்பட்ட கேமரா செயல்திறனையும் காண முடியும் எனத் தெரிவித்திருக்கிறது குவால்காம். குறைந்த வெளிச்ச காணொளிகளை பதிவு செய்யும் வசதியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறதாம்.
அடுத்து வெளியாகவிருக்கும் மிட் ரேஞ்சு ஹானர் மற்றும் விவோ ஸ்மார்ட்போன்களில் இந்தப் புதிய ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.