வாட்ஸ்அப் சேனலில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி
வாட்ஸ்அப், சமீபத்தில் சேனல்கள் எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த சேனலில் இணையும் உறுப்பினர்களுக்கு, உரைகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை பகிர இந்த புதிய தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. தற்போது இந்த வாட்ஸ்அப் சேனலில் இணைந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இணைந்ததும் அவர் தனது முதல் பதிவாக, "வாட்ஸ்அப் சமூகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி! தொடர் தொடர்புகளின் பயணத்தில் இது இன்னும் ஒரு படி நெருக்கமாக உள்ளது" என்று கூறினார். அதோடு, "இங்கே இணைந்திருப்போம்! புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இருந்து ஒரு படம் இங்கே உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
வாட்ஸ்அப் சேனல்களில் இணைந்துள்ள மற்ற பிரபலங்கள் யார்?
பிரதமர் மோடியைத் தவிர, வாட்ஸ்அப் சேனல்களில் சேர்ந்துள்ள மற்ற குறிப்பிடத்தக்க பிரபலங்கள் யார் தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணி , கத்ரீனா கைஃப் , தில்ஜித் தோசன்ஜ், அக்ஷய் குமார் , விஜய் தேவரகொண்டா மற்றும் நேஹா கக்கர் ஆகியோர். இந்த வசதி மூலம், இந்த பிரபலங்கள் பதிவிடும் அனைத்து பதிவும், அந்த சேனலில் இணைந்துள்ள அனைத்து நபர்களுக்கும், வாட்ஸ்அப் மெசேஜ் போல வரும்.
சேனல்களைக் கண்டறிந்து பின்தொடர்வது எப்படி
வாட்ஸ்அப்பில் "அப்டேட்ஸ்" (Updates) என்ற புதிய பகுதியில் சேனல்களின் பட்டியலை காணலாம். பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களை, நிர்வாகி அல்லது பிற பின்தொடர்பவர்களுக்கு வெளிப்படுத்தாமல் சேனல்களைப் பின்தொடரலாம். பயனரின் நாட்டின் அடிப்படையில், பட்டியலிடப்படும் சேனல்கள் மாறுபடும். மேலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், புதிய, ட்ரெண்டிங்கில் உள்ள மற்றும் பிரபலமான சேனல்களைப் பார்க்கலாம்.