அக். 28ல் நிகழவிருக்கும் பகுதி சந்திர கிரகணம்.. இந்தியாவிலிருந்தும் பார்க்க முடியும்!
இந்த ஆண்டின் முக்கியமான வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான பகுதி சந்திர கிரகணம் வரும் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நிகழவிருக்கிறது. முந்தைய வானியல் நிகழ்வுகளைப் போல அல்லாமல், இந்த நிகழ்வை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பார்க்க முடியும் என்பது சிறப்பு. இந்த ஆண்டு முன்னதாக மே 5ம் தேதியும் பெனூம்ப்ரல் சந்திர கிரகணம் ஒன்று தோன்றியது. ஆனால், இந்தியாவிலிருந்து அதனை பார்க்க முடியவில்லை. நிலவு மற்றும் சூரியனுக்கு இடையே பூமி வந்து, சூரிய ஒளி நிலவின் மீது படுவதை தடுப்பதையே சந்திர கிரகணம் என அழைக்கிறோம். சூரியனின் ஒளியை பூமி தடுத்து விடுவதால் நிலவானது சாதாரணமான வெண்மை நிறத்திலிருந்து மாறி சந்திர கிரகணத்தின் போது சற்று செந்நிறத்தில் காட்சியளிக்கும்.
ஏன் பகுதி சந்திர கிரகணம் என அழைக்கிறார்கள்?
வரும் அக்டோபர் 28 அன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தின் போது, முழுமையாக சூரியன் மற்றும் நிலவிற்கு இடையே வராமல், சூரியனின் மற்றும் நிலவிற்கு இடையே பகுதி அளவு மட்டுமே பூமி தோன்றவிருக்கிறது. எனவே தான் இதனை பகுதி சந்திர கிரகணம் என அழைக்கிறார்கள். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவைத் தவிர்த்து, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வடக்கு அமெரிக்கா, அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இருந்தும் பார்க்க முடியும். இந்த சந்திர கிரகணமானது இந்திய நேரப்படி அக்டோபர் 28 நள்ளிரவு 11:31 மணிக்குத் தோன்றி, அக்டோபர் 29 அதிகாலை 3.36 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.