சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு வீரர் பாகிஸ்தானின் முகமது ஜீஷன் அலி
செய்தி முன்னோட்டம்
சீனாவின் 'தியாங்காங்' விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரராக பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜீஷன் அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன மனித விண்வெளி ஏஜென்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை ஏவப்படவுள்ள சீனாவின் 'ஷென்சோ-24' விண்கலத்தில், இரண்டு சீன விண்வெளி வீரர்களுடன் இணைந்து முகமது ஜீஷன் அலி இந்த சிறப்புமிக்கப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
முக்கிய ஆய்வுகள்
உயிரித் தொழில்நுட்பம் மற்றும் பொருள் அறிவியலில் நான்கு முக்கிய ஆய்வுகள்
தியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் காலத்தில் முகமது ஜீஷன் அலி 'பேலோட் ஸ்பெஷலிஸ்ட் எனப்படும் ஆய்வு நிபுணராகப் பணியாற்றவுள்ளார்.
அங்கு உயிரித் தொழில்நுட்பம் மற்றும் பொருள் அறிவியல் ஆகிய துறைகளில் நான்கு முக்கிய அறிவியல் சோதனைகளை அவர் மேற்கொள்ள இருக்கிறார்.
குறிப்பாக, ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள் தொடர்பான பிரத்யேக ஆய்வும் இதில் அடங்கும்.
மேலும், விண்வெளி நிலையத்தின் வழக்கமான அன்றாட செயல்பாடுகளிலும் அவர் சீன வீரர்களுக்கு உதவுவார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவரது தேர்வு நடைபெற்றுள்ளது.
பயணம்
தொழில்நுட்ப சீன மொழியை கற்றுத்தேர்ந்த கடினப் பயிற்சிப் பயணம்
இந்த விண்வெளி பயணத்திற்கான தனது தயார்ப்படுத்தல் குறித்து ஜியுகுவான் ஏவுதளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முகமது ஜீஷன் அலி, தொழில்நுட்ப ரீதியான சீன மொழியை கற்றுக்கொள்வதே தனது பயிற்சியின் மிக முக்கியமான பகுதியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
விண்கலம் மற்றும் விண்வெளி நிலையத்தில் உள்ள அனைத்து சுவிட்சுகள், மென்பொருள்கள் மற்றும் குரல் அறிவிப்புகள் அனைத்தும் சீன மொழியிலேயே இருப்பதால், தொழில்நுட்ப சீன மொழியை முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டியிருந்தது என அவர் விவரித்துள்ளார்.
விண்வெளி வீரர்களுக்கிடையேயான இந்த ஒத்துழைப்பு, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையிலான ஆழமான நட்புறவைப் பிரதிபலிப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
2030 நிலவுப் பயணம்
2030 நிலவுப் பயணத்திற்கான சீனாவின் அடுத்தகட்ட பாய்ச்சல்
சீனாவின் விண்வெளித் திட்டத்திலும், 2030-ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் அந்நாட்டின் லட்சியப் பயணத்திலும் ஷென்சோ-24 விண்கலத் திட்டம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
தற்போது தியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் ஷென்சோ-23 குழுவினருடன் இணைந்து, விண்வெளிச் சுற்றுப்பாதையில் பணி மாற்ற நடவடிக்கைகளை இந்தப் புதிய குழு மேற்கொள்ளும்.
இதனைத் தொடர்ந்து, ஷென்சோ-23 குழுவில் பணியை முடித்துத் திரும்பும் இரண்டு சீன வீரர்களுடன் இணைந்து முகமது ஜீஷன் அலி பூமிக்கு திரும்புவார் என சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.