ஓப்போ, மோட்டோரோலா, சாம்சங்.. ஃப்ளிப் போன் செக்மண்டில் அதிகரித்திருக்கும் போட்டி
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவில் ஃப்ளிப் மற்றும் ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டது சாம்சங். அந்நிறுவனத்தின் ஃப்ளிப் போன் வரிசையில் தற்போது வெளியாகியிருப்பது ஐந்தாவது மாடலாகும். 'சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5' என்ற போனை தற்போது வெளியிட்டிருக்கிறது சாம்சங். இதற்கு முன்பு அந்நிறுவனம் ஃப்ளிப் போனை அறிமுகப்படுத்திய போது, அதற்கு பெரிய போட்டி என்று எதுவுமில்லை. ஆனால் தற்போது ஓப்போ மற்றும் மோட்டோரோலா ஆகிய நிறுவனங்கள் தங்களது புதிய ஃப்ளிப் போன்களை வெளியிட்டு சாம்சங்கிற்கான போட்டியை அதிகரித்திருக்கின்றன. விலை மற்றும் இதர சில வசதிகள் அடிப்படையில், சாம்சங்கின் புதிய ஃப்ளிப் 5 மேம்பட்டிருக்கிறதா?
சாம்சங்க Z ஃப்ளிப் 5:
ஓப்போவின் ஃபைன்டு N2 ஃப்ளிப் போனானது ரூ.89,999 ரூபாயிலும், மோட்டோரோலாவின் டாப் எண்டு ஃப்ளிப் போனான ரேசர் 40 அல்ட்ர ரூ.90,000 விலையிலும் தற்போது விற்பனையாகி வருகின்றன. இந்த இரண்டு போன்களையும் விட சாம்சங்கின் அடிப்படை ஃப்ளிப்5-ஆனது ரூ.10,000 அதிக விலையைக் கொண்டிருக்கிறது. அதிலும் டாப் எண்டு என்றால் ரூ.20,000 கூடுதல் விலையைக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு ஃப்ளிப் போன்களையும் விட, சாம்சங்கின் ஃப்ளிப்5-ஆனது ஃப்ளாக்ஷிப் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. எனினும், பிற அம்சங்களில் மற்ற போன்கள் சாம்சங்கின் புதிய போனுக்கு இணையாகவே இருக்கின்றன. கேமரா உள்ளிட்ட சில அம்சங்களில், சாம்சங்கை விட பிற போன்கள் சிறந்த வசதியைக் கொண்டிருக்கின்றன. எனவே, புதிய ஃப்ளிப் போனை இன்னும் கொஞ்சம் குறைவான விலையில் சாம்சங் வெளியிட்டிருக்கலாம்.