பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ, ஏன்?
ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு சாட்பாட் சேவையை பொதுப் பயனாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்கள் பலவும் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஓபன்ஏஐயின் சேவையின் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனம், தங்களுடைய சொந்த செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை உருவாக்கப் பயன்படுத்தியிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம். மேலும், குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், தங்கள் சேவைகளை பைட்டான்ஸ் நிறுவனம் பயன்படுத்துவதை தற்காலிகமாக தடையும் செய்திருக்கிறது ஓபன்ஏஐ. டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் நடவடிக்கைகளானது, தங்களது பயன்பாட்டு விதிமுறைகள் மீறும் வகையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார் ஓபன்ஏஐ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நிகோ ஃபெலிக்ஸ்.
குற்றச்சாட்டை மறுக்கும் பைட்டான்ஸ்:
ஓபன்ஏஐயின் API சேவையைக் கொண்டு ஒரு AI மாடலை தொடக்கத்தில் சிறிய அளவில் பரிசோதனை பார்த்தது உண்மை தான் என சீன பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்திருக்கும் பைட்டான்ஸ், கடந்த ஏப்ரல் மாதமே அந்த நடவடிக்கைகளை நிறுத்தி விட்டதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், ஓபன்ஏஐயின் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அந்நிறுனம், ஓபன்ஏஐயின் பயன்பாட்டு விதிமுறைகளை மீறும் வகையில் தாங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறது ஓபன்ஏஐ. ஏற்கனவே பல்வேறு புகார்களில் பைட்டானஸின் பெயர் தவறான காரணங்களுக்காக அடிபடும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு அமெரிக்காவின் அதன் வணிகத்தை மேற்கொள்வதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.