'GPT ஸ்டோரின்' வெளியீட்டை 2024-க்குத் தள்ளி வைத்த ஓபன்ஏஐ
பயனாளர்களின் பயன்பாட்டிற்காக சாட்ஜிபிடியிலேயே ஜிபிடி ஸ்டோர் (GPT Store) ஒன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிவித்தது ஓபன்ஏஐ. பல்வேறு காரணங்களால் அதன் வெளியீடு டிசம்பர் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது டிசம்பரிலும் இல்லாமல் 2024லேயே அந்த GPT ஸ்டோர் வசதியை சாட்ஜிபிடியில் ஓபன்ஏஐ அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாட்ஜிபிடி சேவையினுள் பயனாளர்களே தனிப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட சாட்ஜிபிடி சாட்பாட்களை உருவாக்கும் வகையிலான புதிய வசதியை டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகப்படுத்தியிருந்தது சாட்ஜிபிடி. அப்படி நாம் சாட்ஜிபிடியின் உதவியுடன் உருவாக்கும் சாட்பாட்களை, பிற சாட்ஜிபிடி பயனாளர்கள் பயன்படுத்தும் விதமாக ஒரு பொது இடத்தில் (GPT ஸ்டோர்) பட்டியலிடத் திட்டமிட்டிருந்தது ஓபன்ஏஐ.
GPT ஸ்டோரின் பயன்பாடு:
இதன் மூலம் ஒரு தனிநபர் குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக சாட்ஜிபிடியின் உதவியுடன் தான் உருவாக்கிய சாட்ஜிபிடி சாட்பாட்டை அந்த GPT ஸ்டோரில் பட்டியலிடலாம். ஒருவேளை நம்முடைய உருவாக்கம் பிற சாட்ஜிபிடி பயனாளர்களும் விரும்பி, அதனை அதிக பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினால், வருவாய்ப் பகிர்வு திட்டத்தின் கீழ் அந்தக் குறிப்பிட்ட சாட்பாட்டை உருவாக்கியவர்களுக்கும் வருவாயைப் பகிர்ந்து கொள்ளவிருப்பதாகத் தெரிவித்திருந்தது ஓபன்ஏஐ. ஆனால், டெவலப்பர்கள் மாநாடு முடிவடைந்த சில வாரங்களுக்குள்ளேயே ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் நீக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து தொடர் களேபரங்கள் நடைபெற்றதையடுத்து, ஓபன்ஏஐயின் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
எப்போது GPT ஸ்டோர் அறிமுகமாகும்?
மீண்டும் சாம் ஆல்ட்மேன் பணியில் இணைந்து ஓபன்ஏஐ நிறுவனத்தில் நிலைமை சீராகி வரும் நிலையில், GPT ஸ்டோரின் வெளியீட்டுத் தாமதம் குறித்த இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது. GPT ஸ்டோரின் வெளியீடு மட்டுமே தற்போது தாமதமாவதாகவும், பயனாளர்கள் தனிப்பட்ட சாட்பாட்களை உருவாக்கலாம் எனவும், அதனை நேரடியாகப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த சாட்பாட்களை பட்டியலிடுவதற்கா பொதுத்தளம் (GPT ஸ்டோர்) மட்டும் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும், அந்த அறிமுகத்துடன் புதிய சில வசதிகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.