AI உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்களைக் கண்டறிய புதிய கருவியை உருவாக்கி வரும் ஓபன்ஏஐ
உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கி வெளியிட்டதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உருவாக்கிய உள்ளடக்கங்களைக் கண்டறிவதற்கான புதிய கருவிகளை சோதனை செய்து வருகிறது ஓபன்ஏஐ நிறுவனம். கடந்த ஆண்டு எழுத்தை அடிப்படையாகக் கொண்ட சாட்ஜிபிடி மற்றும் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட டால்-இ உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை வெளியிட்டது அந்நிறுவனம். செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைக் கொண்டு போலியான மற்றும் தவறான புகைப்படங்களை இணையதள பயனாளர்கள் அதிகம் உருவாக்கி வருவதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட புகைப்படம் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய புதிய கருவிகளை தங்கள் நிறுவனத்திற்குள்ளேயே சோதனை செய்து வருகிறது ஓபன்ஏஐ நிறுவனம்.
தலைமை தொழில்நுட்ப அதிகாரி சொல்வது என்ன?
ஒரு குறிப்பிட்ட புகைப்படம் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டதா என்பதனை தங்களுடைய இந்தப் புதிய கருவியானது 99% சரியான அடையாளம் காணுவதாக ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான மிரா முராதி தெரிவித்துள்ளார். இந்தப் புதிய கருவியை அந்நிறுவனம் எப்போது பொதுப் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வெளியிடும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜனவரி மாதம் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை கண்டறியும் வகையிலான கருவி ஒன்றை வெளியிட்டது ஓபன்ஏஐ. ஆனால், அந்தக் கருவியின் கண்டறியும் திறனானது எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததைத் தொடர்ந்து, அதனை பயனாளர்களின் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது. மிகவும் நம்பகமான திறன் வாய்ந்த கருவியை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது அந்நிறுவனம்.