ஓபன்ஏஐ நிறுவனத்துடன் மெகா ஒப்பந்தம்; ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு மாற்றாக பென்டகனின் புதிய ஏஐ வியூகம் இதுதானா?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குத் தடை விதித்த சில மணி நேரங்களிலேயே, ஓபன்ஏஐ நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் பென்டகனின் ரகசிய நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்படும் என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் உறுதிப்படுத்தியுள்ளார். அதிபர் டிரம்ப் மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
முக்கிய நிபந்தனைகள்
ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகள்
இந்த ஒப்பந்தம் சில கடுமையான விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க குடிமக்களைக் கண்காணிக்கக் கூடாது என்றும், தாக்குதல் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் என்றும் சாம் ஆல்ட்மேன் தெளிவுபடுத்தியுள்ளார். தானியங்கி ஆயுதங்கள் தொடர்பான முடிவுகளிலும் மனிதத் தலையீடு அவசியம் என்பது ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைப் பாதுகாப்புத் துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிக்கல்
ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு ஏற்பட்ட சிக்கல்
முன்னதாக, ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது ஏஐ தொழில்நுட்பத்தைப் பாதுகாப்புத் துறைக்கு வழங்கும்போது சில பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை தளர்த்த மறுத்துவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த டிரம்ப் நிர்வாகம், அந்த நிறுவனத்தை தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தான விநியோகச் சங்கிலி என்று அறிவித்தது. மேலும், அனைத்து மத்திய அரசு ஏஜென்சிகளும் ஆந்த்ரோபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த மோதலே ஓபன்ஏஐ நிறுவனத்திற்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.
பொறியாளர் நியமனம்
எதிர்காலத் திட்டமும் பொறியாளர்கள் நியமனமும்
இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, ஓபன்ஏஐ நிறுவனம் தனது சிறப்புப் பொறியாளர்களை நேரடியாகப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து பணியாற்ற அனுப்ப உள்ளது. இதன் மூலம் ஏஐ மாதிரிகளின் செயல்பாடு மற்றும் பாதுகாப்புத் தரத்தை அவர்கள் கண்காணிப்பார்கள். "உலகம் ஒரு சிக்கலான மற்றும் ஆபத்தான இடமாக மாறி வரும் சூழலில், நியாயமான ஒப்பந்தங்கள் மூலம் மனிதகுலத்திற்குச் சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய கூட்டணி அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் ஏஐயின் பங்கை முற்றிலும் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.