பிரதமர் மோடியைச் சந்திக்கவிருக்கிறார் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன்
உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து உரையாடத் திட்டமிட்டிருக்கிறார் சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன். இந்த வாரம் இந்தியா, இஸ்ரேல், ஜோர்டன், கத்தார், யுஏஇ மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக கடந்த வாரமே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஆல்ட்மேன். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது இந்தியாவில் இருக்கும் ஆல்ட்மேன், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் பலரையும் சந்தித்து AI தொழில்நுட்பங்கள் குறித்து பேசவிருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் காங்கிரஸின் முன்பு ஆஜாராகி AI தொழில்நுட்பங்களுக்கான நெறிமுறைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சாம் ஆல்ட்மேன்:
இந்தியாவில் தற்போது அவர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியின் போது AI குறித்த தன்னுடைய பார்வையைப் பகிர்ந்திருக்கிறார். "ஒவ்வொரு முறை தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் போது சில வேலையிழப்புகள் நடைபெறும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தற்போது AI புரட்சியினைத் தொடர்ந்து வேலையிழப்புகள் கண்டிப்பாக நடைபெறும். ஆனால், அதே சமயத்தில் புதிய வேலை வாய்ப்புகளையும் AI தொழில்நுட்பம் உருவாக்கித் தரும் என்பதை நாம் மறுக்க முடியாது", எனத் தெரிவித்திருக்கிறார் சாம் ஆல்ட்மேன். மேலும், தங்களைப் போல AI தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் முதன்மையாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் AI பயன்பாடு மற்றும் உருவாக்கத்திற்கே நெறிமுறைகளை வகுக்கக் கூறியதாகவும், சிறிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படக்கூடாது எனவும். அவர் தெரிவித்திருக்கிறார்.