Hugging Face நிறுவனத்தில் புகுந்து பல நாட்கள் ரகசியமாக ஹேக்கிங் செய்த ஓபன்ஏஐ ஏஜென்ட்! பகீர் பின்னணி
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய சுயமாக இயங்கும் ஏஐ ஏஜென்ட், Hugging Face நிறுவனத்தின் சிஸ்டத்திற்குள் புகுந்து பல நாட்கள் ஹேக்கிங் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11 முதல் 13 வரை நடந்த இந்தச் சம்பவத்தை, ஹேக்கிங் முடிந்து பல நாட்கள் கழித்து ஜூலை 20 அன்றே ஓபன்ஏஐ நிறுவனம் கண்டறிந்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏஐ மாடல்கள்
கட்டுப்பாட்டை மீறித் தப்பிச் சென்ற ஏஐ மாடல்கள்
ஓபன்ஏஐ நிறுவனம் தனது புதிய மாடல்களான GPT-5.6 Sol மற்றும் பெயரிடப்படாத மற்றொரு சக்திவாய்ந்த மாடலின் இணையப் பாதுகாப்புத் திறன்களை சோதித்துக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
சோதனைக் கட்டுப்பாடுகளிலிருந்து ஜூலை 9 அன்று தப்பிய இந்த ஏஐ ஏஜென்ட், இணையத்தைப் பயன்படுத்தி Hugging Face நிறுவனத்தின் தரவு செயலாக்கக் கட்டமைப்பிற்குள் புகுந்து அங்கிருந்த சில முக்கியமான தரவுகளையும் சான்றுகளையும் கைப்பற்றியுள்ளது.
விசாரணை
எப்பிஐ விசாரணை மற்றும் தாமதமான அறிவிப்பு
Hugging Face நிறுவனம் தங்கள் சிஸ்டத்தில் ஏதோ ஒரு சுயமாக இயங்கும் ஏஐ ஏஜென்ட் ஊடுருவியுள்ளதாக ஜூலை 16 அன்று தெரிவித்த பிறகே, அது தனது சொந்த ஏஐ ஏஜென்ட் என்பதை ஓபன்ஏஐ உணர்ந்துள்ளது.
அதற்குள்ளாகவே Hugging Face நிறுவனம் அமெரிக்கக் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐக்கு புகார் அளித்திருந்தது.
இதன் பின்னர் ஜூலை 21 அன்று ஓபன்ஏஐ இந்த சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டு, ஏஐ பாதுகாப்பில் இது ஒரு முன்னோடியில்லாத திருப்புமுனை எனத் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு
ஏஐ பாதுகாப்பில் எழும் புதிய கேள்விகள்
மனிதர்களின் நேரடி மேலாண்மை இல்லாமல் சுயமாக முடிவெடுக்கும் ஏஐ ஏஜென்ட்டுகளின் பாதுகாப்பு குறித்து இந்தச் சம்பவம் மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏஐ அமைப்புகள் சோதனைக் கட்டுப்பாடுகளை மீறித் தப்புவதும், நிறுவனங்கள் அதைக் கவனிக்கத் தவறுவதும் எதிர்காலத்தில் பேராபத்தை விளைவிக்கும் என சர்வதேச சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஓபன்ஏஐ நிறுவனம் தனது பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாக மறுபரிசீலனை செய்து வருகிறது.