24GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி
ஸ்மார்ட்போன்களின் ப்ராசஸிங் பயன்பாடு மேம்படுவதற்கு ஏற்ப, அதில் பயன்படுத்தப்படும் ரேமின் (RAM) அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதலில் அடிப்படையாக 2GB அளவாக இருந்த ரேமின் அளவு, தற்போது 4GB-யாக உயர்ந்திருக்கிறது. மேலும், அடிப்படை அளவிற்கு ஏற்ப அதிகபட்ச ரேமின் அளவும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவில் தற்போது அதிகபட்சமாக 18GB அளவிலான ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் இருக்கின்றன. இந்நிலையில், 24GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிடவிருப்பதாக ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இல்லை சீனாவில். மேற்கூறிய இரண்டு நிறுவனங்களும் இந்தியாவிலும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் நிலையில், சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக ரேம் கொண்ட மொபைல்களை இந்தியாவிலும் அந்நிறுவனங்கள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
24GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்:
சீனாவில், 24GB ரேம் கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்திருக்கும் நிலையில், என்ன மாடல் என்ற தகவலை வெளியிடாமல் 24GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவிருப்பதாக மட்டும் அறிவித்திருக்கிறது ரியல்மி. ரியல்மியின் ஃபிளாக்ஷிப் சீரிஸான GT சீரிஸின் கீழ் 24GB ரேம் கொண்ட புதிய மொபைலை அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேமின் அளவு மட்டுமல்லாது, சார்ஜிங் வேகம், பேட்டரி அளவு, கேமராவின் சென்சார் தரம் ஆகியவற்றையும் மேம்படுத்தி ஒரு ஒட்டுமொத்த சிறந்த பேக்கேஜாக புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட அந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போது 16GB ரேம் கொண்ட ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.