அரசின் ONDC தளத்திலும் உணவு டெலிவரி சேவை.. என்னென்ன பின்னடைவுகள்?
ONDC தளத்தின் மூலம் உணவு டெலிவரி சேவையும் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ONDC என்பது ஒரு இணைய வணிகத் தளம். இதனால் நமக்கு என்ன பயன்? ONDC (Open Network for Digital Commerce) என்பது இந்திய அரசால் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஒரு ஆன்லைன் வணிகத் தளம். இது ஒரு செயலியோ அல்லது சேவையோ கிடையாது, வெறும் தளம் மட்டுமே. இதன் மூலம் விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர் இடையேயான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது இந்திய அரசு. ஆன்லைன் வணிக சேவை வழங்கும் நிறுவனங்கள் தரகாக குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்து விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர் இருவருக்குமே சுமையை ஏற்படுத்துகிறது.
தரகற்ற ஆன்லைன் வணிக சேவைத் தளம்:
இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யவும், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கவுமே இந்தத் தளத்தை வடிவமைத்திருக்கிறது இந்திய அரசு. ஸ்விக்கி மற்றும் ஸோமாட்டோவைப் போலவே உணவையும் இந்தத் தளத்தின் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்விக்கி மற்றும் ஸோமாட்டோவைப் போல இந்த தளத்திற்கென சுயமாக டெலிவரி ஏஜெண்டுகள் கிடையாது. எனவே, ஆர்டர் செய்யப்படும் உணவுகளை குறிப்பிட்ட உணவகங்களே அவர்களுடைய டெலிவரி ஏஜெண்டைக் கொண்டு டெலிவரி செய்ய வேண்டும். இதனால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட உணவகங்களால் சேவை வழங்க முடியாமல் போகலாம். மேலும், டெலிவரி ஏஜெண்டுகள் இல்லாத உணவகங்களால் இந்த தளத்தின் மூலம் சேவை வழங்க முடியாது.