இந்தியாவில் வெளியானது UPI வசதிகளுடன் கூடிய 'நோக்கியா 105 கிளாஸிக்' 2G போன்
யுபிஐ கட்டண சேவையைப் பயன்படுத்தும் வசதியுடன் கூடிய புதிய 'நோக்கியா 105 கிளாஸிக்' 2G ஃப்யூச்சர் போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஃபின்லாந்தைச் சேர்ந்த HMD குளோபல் நிறுவனம். ஆல்ஃபாநியூமெரிக்க கீபேடுடன், யுபிஐ கட்டண சேவைக்கான பிரத்தியேக செயலி ஒன்றையும் கொண்டிருக்கிறது இந்த 2G ஃப்யூச்சர் போன். இந்த போன் மூலம் யுபிஐ பரிவர்த்தனை செய்ய இணையம் தேவையில்லை, மாறாக 'யுபிஐ 123பே' என்ற முறையைக் கொண்டு அழைப்புகள் மூலமாகவே யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். நோக்கியா.காம் இணையதளத்திலும், பிற நேரடி சில்லறை விற்பனைக் கடைகளிலும், இந்த ஃப்யூச்சர் போனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது HMD குளோபல் நிறுவனம்.
நோக்கியா 105 கிளாஸிக்: பிற வசதிகள் மற்றும் விலை
சிங்கிள் சிம், டூயல் சிம், சார்ஜருடன் மற்றும் சார்ஜர் இல்லாமல் என நான்கு வேரியன்ட்களாக இந்த ஃப்யூச்சர் போனை வெளியிட்டிருக்கிறது HMD குளோபல் நிறுவனம். 800mAh பேட்டரியுடன் ஒரு நாள் முழுமைக்குமான பேட்டரி பேக்அப்பைக் கொண்டிருக்கிறது இந்த நோக்கிய 105 கிளாஸிக். ஒருவருட ரீபிளேஸ்மெண்ட் காரண்டியுடன் விற்பனை செய்யப்படும் இந்த போனில், வயர்லெஸ் FM ரேடியோ வசதியும் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த போனின் ஒரேயொரு சிம் கொண்ட, சார்ஜர் இல்லாத வேரியன்டை ரூ.999 விலையில் வெளியிட்டிருக்கிறது HMD குளோபல். இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்தாத மக்களுக்கும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளுக்குமான பாலமாக இந்த ஃப்யூச்சர் போன் செயல்படும் எனத் தெரிவித்திருக்கிறார் HMD குளோபல் நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் ரவி குன்வார்.