ஐபோன் 15ஐ பாதிக்கின்றனவா, BMW மற்றும் டொயோட்டா நிறுவன கார்களில் உள்ள வயர்லெஸ் சார்ஜர்கள்?
வயர்டு சார்ஜிங்கைத் தொடர்ந்து வயர்லெஸ் சார்ஜிங் வசதி உலகம் முழுவதும் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது. இதற்கு முன்னோடியாக ஆப்பிள் நிறுவனம் பல ஆண்டுகளாகவே வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடனேயே தங்களுடைய ஐபோன்களை வெளியிட்டு வருகின்றன. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களுடைய வாகனத்தில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை பிரதானமாகவே வழங்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், கார்களில் உள்ள வயர்லெஸ் சார்ஜிங்கைப் பயன்படுத்திய சில ஐபோன்களில் NFC செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஐபோன் 15 மாடலை கார்களில் உள்ள வயர்லெஸ் சார்ஜிங்கைப் பயன்படுத்தி சார்ஜ் செய்தபிறகு இந்தப் பிரச்சினை எழுந்திருப்பதாகப் புகாரளித்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
ஆப்பிளின் ஐபோனில் பிரச்சினையா?
இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் சில மாடல் கார்களில் உள்ள வயர்லெஸ் சார்ஜிங்கைப் பயன்படுத்திய பின்பே இந்தப் பிரச்சினை எழுந்திருப்பதாகவும், கார்களில் உள்ள வயர்லெஸ் சார்ஜிங்கைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். பிஎம்டபிள்யூ நிறுவனமும், ஐபோன் 15 மாடலை தங்களுடைய கார்களில் உள்ள வயர்லெஸ் சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருப்பதாக, எக்ஸில் சில பயனாளர்கள் பதிவிட்டிருக்கிறார்கள். ஆப்பிள் மாடலில் இந்தப் பிரச்சினை எழுந்திருக்கும் போதிலும், ஆண்ட்ராய்டு போன்களில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. எனவே, ஆப்பிளின் சாதனத்தில் கோளாறு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறது ஆப்பிள்?