இயற்பியலுக்கான நோபல் பரிசு 2026: பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிப்பு; 'நியூட்ரானோ' ஆய்வுகளுக்கு உயரிய அங்கீகாரம்
செய்தி முன்னோட்டம்
2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிரபல இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டவெளியில் நிகழும் விண்வெளி நிகழ்வுகளிலிருந்து வெளியாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ துகள்களை கண்டறிந்தது மற்றும் 'ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தை' அமைப்பதில் முக்கிய பங்காற்றியதற்காக அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.
நியூட்ரினோக்கள்
'பேய் துகள்கள்' (Ghost Particles) என அழைக்கப்படும் நியூட்ரினோக்கள்
இயற்கையில் அதிகம் காணப்படும் துகள்களில் நியூட்ரினோக்களும் ஒன்று.
இருப்பினும் மின் சுமை அற்ற இத்துகள்கள், பிற பொருட்களுடன் மிகவும் அரிதாகவே வினைபுரிகின்றன. இதனால் மனித உடல்கள் மற்றும் பிற பொருட்கள் வழியே வினாடிக்கு கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் ஊடுருவிச் சென்றாலும் எந்தவித தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை.
ஆனால், பிரபஞ்சத்தின் தொலைதூர விண்மீன் மண்டலங்களிலிருந்து எந்த மாற்றமும் இன்றிப் பயணித்து வரும் திறன் கொண்டவை என்பதால், வானியலாளர்களுக்கு அண்டவெளியை ஆராய இத்துகள்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.
ஆய்வகம்
அண்டார்டிகா பனிப்பாறையில் பிரம்மாண்ட ஆய்வகம்
1988-ஆம் ஆண்டில் பிரான்சிஸ் ஹால்சன், தென் துருவத்தின் அடியில் அமைந்திருக்கும் அடர்ந்த பனிப்பாறைகளை துகள்களை கண்டறியும் கருவியாக பயன்படுத்தலாம் என முன்மொழிந்தார்.
பனிப்பாறையில் இருக்கும் அணுக்கருவின் மீது உயர் ஆற்றல் நியூட்ரினோ மோதும்போது சிறிய ஒளிக்கீற்று உருவாகும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, பனிப்பாறைக்கு அடியில் ஆயிரக்கணக்கான ஒளி உணரிகளுடன் (Light Sensors) உருவாக்கப்பட்டதுதான் 'ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம்'.
பல ஆண்டுகள் நீடித்த கட்டுமானத்திற்குப் பிறகு, இந்த ஆய்வுமையம் 2011-இல் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
துறை
புதிய வானியல் துறை உருவாக்கம்
ஐஸ்கியூப் ஆய்வகம் செயல்பட தொடங்கிய குறுகிய காலத்தில், சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வந்த அதிவேக நியூட்ரினோக்களைக் கண்டறிந்தது.
இது 'நியூட்ரானோ வானியல்' என்ற புதிய ஆய்வுத் துறை உருவாவதற்கு வித்திட்டது.
"பிரான்சிஸ் ஹால்சன் மற்றும் அவரது சர்வதேச ஆய்வுக் குழுவினர் நமக்கு ஒரு அற்புதமான அறிவியல் கருவியை வழங்கியுள்ளனர்" என நோபல் பரிசு இயற்பியல் குழுவின் தலைவர் மார்க் பியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.