குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுத்தளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளது. இதற்கான ரூ.6.24 கோடி ஒப்பந்தப்புள்ளிக்கான அறிவிப்பினை இந்தியா விண்வெளித்துறை அண்மையில் வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக இதற்கான பணிகளை துவங்க ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசிடமிருந்து நிலத்தினை கையகப்படுத்துவதற்கான பணிகள் நடந்தது. அதன் முடிவாக தற்போது தூத்துக்குடி அருகேயுள்ள குலசேகரப்பட்டிணத்தில் கடற்கரை ஒட்டி அரைவட்ட வடிவில் 2,376 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் முதல் வாரத்தில் முதற்கட்ட பணிகள் துவங்க வாய்ப்பு
ஆலோசனை நடத்தி முடித்த பின்னரே, ரூ.6 கோடியே 24 லட்சத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரினை எடுப்பதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரும் 19ம் தேதி வரை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பெற்ற பின்னர் அதனை பூர்த்தி செய்து வரும் ஜூன் 22ம் தேதி மாலை 3 மணிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த டெண்டர் பணிகள் யாவும் முடிந்த நிலையில், இந்த ஏவுதளத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூலை மாதம் முதல் வாரம் முதல் இதற்கான பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.