புதிய M10 5G டேப்லட் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெனோவோ
இந்தியாவில் தங்களது புதிய 'M10 5G' டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது லெனோவோ நிறுவனம். இந்தியாவில் டேப்லட்களை விற்பனை செய்து வரும் சில நிறுவனங்களில் லெனோவோவும் ஒன்று. என்னென்ன வசதிகளுடன் இந்த புதிய டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது லெனோவோ? 400 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 10.61-இன்ச் LCD டிஸ்பிளேவைக் கொண்டு வெளியாகியிருக்கிறது புதிய M10. பின்பக்கம் 13MP கேமராவும், முன்பக்கம் 8MP கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. டால்பி அட்மாஸ் வசதியுடன் கூடிய இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் C மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவையும் இந்த புதிய டேப்லட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 128GB என்ற ஒரே ஸ்டோரேஜ் தேர்வுடனும், 4GB மற்றும் 6GB என இரண்டு ரேம் தேர்வுகளுடனும் வெளியாகியிருக்கிறது புதிய M10 5G.
லெனோவோ டேப் M10 5G: ப்ராசஸர் மற்றும் விலை
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்தப் புதிய டேப்லட்டானது, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5G ப்ராசஸரைக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 7,700mAh பேட்டரியை இந்த புதிய M10-ல் வழங்கியிருக்கிறது லெனோவோ. இந்த பேட்டரியானது 12 மணி நேர வீடியோ பிளேபேக் அல்லது 55 மணி நேர மியூசிக் பிளேபேக்கை வழங்கும் எனத் தெரிவித்திருக்கிறது லெனோவோ. 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை ரூ.24,999 விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெனோவோ. 6GB ரேம் கொண்ட வேரியன்டின் விலையை இன்னும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படவிருக்கிறது புதிய லெனோவோ டேப் M10 5G. விரைவில் லெனோவோ ஆஃப்லைன் ஸ்டோர்களிலும், வலைத்தளத்திலும் விற்பனை தொடங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.