'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம்
முன்னர் ஸ்மார்ட்போன்களானது பயனர்களே மாற்றக்கூடிய வகையிலான பேட்டரிக்களை கொண்டே வெளியாகி வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் பேட்டரிக்களை சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றும் வகையில் வடிவமைத்து வெளியிட்டு வருகின்றன. தண்ணீரில் இருந்து பாதுகாப்பு, ஸ்லிம்மான ஸ்மார்ட்போன் வடிவமைப்பு என இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இப்படி பயனர்களே மாற்ற முடியாத வகையில் மாறிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு அதன் ஆயுட்காலத்தையும் சேர்த்து குறைக்கும் வகையில் இருக்கின்றன. ஸ்மார்ட்போன்களை விட மிக வேகமாக தேய்மானம் அடைபவை அதன் பேட்டரிக்கள். அப்படி பேட்டரியால் பழுது ஏற்படும் போது, புதிய பேட்டரிக்களை மாற்றி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த முடந்தது. ஆனால், தற்போது பேட்டரி பழுதுடன் சேர்த்து மொத்த ஸ்மார்ட்போனும் எலெக்ட்ரானிக் குப்பையாக மாறுகிறது.
புதிய அறிவிப்பை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்:
இதற்கு தீர்வு காணும் வகையில், 2027-ல் முதல் வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரிக்கள் பயனர்களே மாற்றக்கூடிய வகையிலான வடிவமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என புதிய சட்டம் ஒன்றை விரைவில் அமல்படுத்தவிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். 2030-ம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 60% வரை குறைக்க வேண்டும் என்ற தங்களது இலக்கை அடையவும் புதிய விதிமுறையைக் கொண்டு வரவிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். இது பயனர்களுக்கு ஒரு ஸ்மார்ட்போன் மீது கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். மேலும், இந்த மாற்றத்தின் மூலம் ஒரு ஸ்மார்ட்போனின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு பயனாளர்கள் பயன்பெறும் வேளையில், அதனால் உருவாகும் எலெக்ட்ரானிக் குப்பையையும் குறைக்கும் எனத் தெரிவித்திருக்கிறது.