தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
டாகிரேட் (DogeRAT) என்ற மால்வேரானது தினமும் நாம் பயன்படுத்தும் செயலிகளின் போலி வடிவில் பரப்பப்படுவதாக பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுட்செக் கண்டறிந்திருக்கிறது.
நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஒபேரா மினி போன்ற செயலிகளின் போலி வடிவில் இந்த டாகிரேட் மால்வேரானது பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், போலி எனக் கண்டறிய முடியாத அளவிற்கு மிகவும் நம்பகத்தன்மையுடன் மேற்கூறிய போலி செயலிகள் இருப்பதாகவும் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த போலி செயலிகளானது பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் லிங்க்குள் மூலமே பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் இந்த மால்வேரின் தாக்கம் இருந்தாலும், இந்திய இணையப் பயனர்கள் அதிகளவின் இந்த மால்வேரின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
சைபர் பாதுகாப்பு
என்ன பாதிப்பு.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இந்த மால்வேரானது பயனர்களின் சாதனத்தில் உள்ள குறுஞ்செய்திகள், தொடர்புகள், வங்கித் தகவல்கள் போன்ற முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இதனை உருவாக்கியவர்களுக்கு அனுப்புகிறது.
மேலும், நம்முடைய சாதனத்தை மோசடி நபர்கள் இயக்குவதற்கான அனுமதியை உருவாக்கி கொடுக்கிறது. இதனால், சைபர் குற்றவாளிகள் அவர்களது இருப்பிடத்தில் இருந்து நம்முடைய சாதனத்தை இயக்கி முக்கியமான தகவல்களை கைப்பற்ற முடியும்.
தற்காத்துக் கொள்வது எப்படி?
தெரியாத நபர்களிடமிருந்து சமூக வலைத்தளங்களிலோ அல்லது வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட குறுஞ்செய்தி செயலிகளிலோ வரும் லிங்க்குகளை கிளிக் செய்யாமல் இருந்தாலே பெரும்பாலும் இது போன்ற இணையத் தாக்குதல்களில இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
அவ்வப்போது நமது சாதனத்தின் இயங்குதளத்தையும், பிற செயலிகளையும் அப்டேட் செய்து செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.