இந்தியாவின் முதல் 12nm ஏஐ சிப் அறிமுகம்: ஜோஹோ ஆதரவு பெற்ற நெட்ராசெமி அசத்தல் சாதனை!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், கேரளத்தைச் சேர்ந்த நெட்ராசெமி நிறுவனம் தனது முதல் 12-நானோமீட்டர் ஏஐ சிப்பான A2000ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த உள்நாட்டு சிப்பின் ஆரம்பக்கட்ட செயல்பாட்டு சோதனைகள் (Silicon Bring-up Testing) வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், இந்த 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இதன் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கப்படவுள்ளது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ மற்றும் யூனிகார்ன் இந்தியா வென்ச்சர்ஸ் ஆகியவற்றிடம் இருந்து மொத்தம் 125 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி இந்த சிப் உருவாக்கப்பட்டுள்ளது.
சிப்செட் தொழில்நுட்ப அம்சங்கள்
உள்ளூர் அளவிலேயே ஏஐ மாடல்களை இயக்கும் நெட்ராசெமி A2000 சிப்செட்டின் மிரட்டலான சிறப்பம்சங்கள்
இந்த புதிய A2000 சிப்பானது, கிளவுட் (Cloud) தொழில்நுட்ப உதவி இல்லாமல், சாதனங்களிலேயே நேரடியாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களை உள்ளூர் அளவிலேயே இயக்கும் திறன் கொண்டதாகும். ஸ்மார்ட் கேமராக்கள், கண்காணிப்பு உபகரணங்கள், ரோபாட்டிக்ஸ் மற்றும் வீடியோ கேட்வேக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த சிப்செட், அதிநவீன வன்பொருள் முடுக்கிகளுடன் (Hardware Acceleration) உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிப்பின் ஆரம்பக்கட்ட மாதிரிகளை (Early Samples) மதிப்பீடு செய்வதற்காகப் பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் (OEMs) நெட்ராசெமி கூட்டு சேர்ந்து வேலை செய்து வருகிறது.
இந்திய செமிகண்டக்டர் ஒப்பீடு
டாடா எலக்ட்ரானிக்ஸ் வசதியை விட மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவான நெட்ராசெமியின் புதிய ஏஐ சிப்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஎல்ஐ (DLI) திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நான்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் நெட்ராசெமியும் ஒன்றாகும். இந்த 12nm சிப்பின் அளவு, குஜராத்தின் தோலேராவில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் செமிகண்டக்டர் ஆலையில் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட 28nm சிப்களை விட மிகவும் சிறியதும் அதிநவீனமானதும் ஆகும். உள்நாட்டிலேயே இத்தகைய அதிநவீன ஏஐ சிப் உருவாக்கப்பட்டுள்ளது, உலகளாவிய செமிகண்டக்டர் சந்தையில் இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.