CCI விதித்த 1,337.76 கோடி அபராதம்: 10% செலுத்துமாறு, கூகுளுக்கு NCLAT அறிவுறுத்தல்
தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னோடியாக திகழும் கூகிள் நிறுவனத்திற்கு, சில மாதங்களுக்கு முன்னர்,CCI, ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. இந்திய சந்தைகளில், கூகிள் தனது மேலாதிக்க நிலையை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) -இடம் மேல்முறையீடு செய்தது கூகிள். மேல்முறையீட்டு மனுவை ஏற்ற இரு உறுப்பினர் கொண்ட பெஞ்ச், மற்ற தரப்பினரையும் விசாரித்த பின்னர், தீர்ப்பை வழங்குவதாக அறிவித்தனர். எனினும், CCI -இன் அபராத உத்தரவிற்கு எதிராக, இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும், அபராத தொகையில் 10 சதவிகிதத்தை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
கூகிள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம்
தீர்ப்பாயம் முன்பு வாதாடிய கூகிள் வழக்கறிஞர், இந்தத் தீர்ப்பு, இந்திய பயனர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும், கூகிள் சாதனங்களின் விலையில் இது பிரதிபலிக்கலாம் எனவும் கூறினார். CCI-இன் உத்தரவை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தினார். "முறையான விசாரணை இல்லாமல், எந்த உத்தரவையும் நிறைவேற்ற முடியாது" என்று கூறிய NCLAT, கூகிளின் அவசரத்தை கண்டித்தது. அக்டோபர் 20 ஆம் தேதி, CCI ஆல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து முறையீடு செய்ய, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டது. அதை குறிப்பிட்ட நீதிபதிகள், "நீங்கள் மேல்முறையீடு செய்ய இரண்டு மாதங்கள் எடுத்தீர்கள். ஆனால், இரண்டு நிமிடங்களில் நாங்கள் ஒரு உத்தரவை வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்," என்று கடிந்து கொண்டனர். வழக்கை பிப்ரவரி 13 ஆம் தேதி பட்டியலிட பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.