மூளை இம்பிளான்ட் ஆய்வு: 3 நோயாளிகளை நாடுகிறது எலான் மஸ்க்கின் நியூராலிங்க்
எலான் மஸ்க் நிறுவிய மூளை-சிப் உருவாக்கும் நிறுவனமான நியூராலிங்க், அதன் புரட்சிகரமான சாதனத்தை மதிப்பிடுவதற்காக மூன்று நோயாளிகளை நீண்ட கால ஆய்வில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் மருத்துவ பரிசோதனை தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவடைய பல ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஆரம்பத்தில், மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் நியூராலிங்க் விண்ணப்பித்தபோது, அந்த நிறுவனம் 10 நோயாளிகளைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. நியூராலிங் மூளை-கணினி இடைமுகம்(BCI) என்ற சிப்பை உருவாகியுள்ளது. இந்த சிப் முடங்கிய நோயாளிகளின் மூளையில் பொருத்தப்பட்டால், எண்ணங்களை மட்டும் வைத்து அவர்களால் டிஜிட்டல் சாதனங்களை இயக்க முடியும்.
ரோபோவை வைத்து அறுவை சிகிச்சை
கடந்த ஆண்டு மனித சோதனைகளைத் தொடங்க அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறுவதற்கு முன்பு இருந்தே, இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக முடங்கிய நோயாளிகளிடமிருந்து ஆர்வத்தைப் பெற்று வருகிறது. ரோபோவை பயன்படுத்தி அந்த சிப்பை ஒரு நோயாளியின் மூளைக்குள் வைப்பதில் இருந்து இந்த ஆய்வுக்கான செயல்முறை தொடங்குகிறது. இந்த ஆய்வு 2031 இல் முடிவடையும் என்றும் 22 முதல் 75 வயதுடைய நோயாளிகள் இதில் பங்கு பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குத் தகுதி பெற, நோயாளிகள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முடக்கமாக இருந்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு 12 மாதங்கள் ஆயுட்காலம் இருக்க வேண்டும்.