
எச்சரிக்கை! வழக்கமான கம்ப்யூட்டர் மவுஸ்களை ஒட்டுக்கேட்கப் பயன்படுத்த முடியும்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
செய்தி முன்னோட்டம்
வழக்கமான கம்ப்யூட்டர் மவுஸைக் கூட ஒட்டுக்கேட்கும் வகையில் ஆடியோ பதிவு செய்யும் சாதனமாகப் பயன்படுத்த முடியும் என்பதை மைக்-இ-மவுஸ் என்ற சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்தத் தகவல், சைபர் பாதுகாப்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேசை அல்லது பரப்பரப்பின் மூலம் கடத்தப்படும் மிகச் சிறிய ஒலி அலைகளைக் கூட, மவுஸில் உள்ள அதிக உணர்திறன் கொண்ட சென்சார்கள் கண்டறிய முடியும் என்று ஆய்வு கூறுகிறது. இந்தச் சென்சார்கள், அறை அதிர்வுகளை அங்கீகரிக்கக்கூடிய ஒலியாக மாற்றும் திறன் கொண்டவை. இதன் மூலம் அருகில் நடக்கும் தனிப்பட்ட உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படலாம். இந்தத் தரவு 61 சதவீதம் வரை துல்லியமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆபத்து
நிதி மோசடி ஆபத்து
இதுவே, நவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்புகள் மூலம் ஒலியைத் தெளிவாக வார்த்தைகளாக மாற்றப் போதுமானது. இந்தத் தாக்குதலின் ஆபத்து குறித்து நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில், மவுஸில் உள்ள இந்த சென்சார்கள் பொதுவாகப் பாதுகாப்பு ஸ்கேன்களில் ஆய்வு செய்யப்படுவதில்லை. இதனால், ஹேக்கர்கள் வங்கி விவரங்கள் உட்பட உணர்வுமிக்கத் தனிப்பட்டத் தகவல்களைத் திருடவும், பெரிய நிதி மோசடிகளை நடத்தவும் வாய்ப்புள்ளது. மைக்-இ-மவுஸ் தாக்குதல்களைத் தடுக்க, மவுஸை சிபியூவிலிருந்து முழுமையாகத் துண்டிக்க, கம்ப்யூட்டரை முழுமையாக பவர் ஆஃப் செய்ய வேண்டியது அவசியம். சாதாரண ஸ்லீப் அல்லது ஹைபர்னேட் பயன்முறையில் வைப்பது கூடப் பெரிஃபெரலைச் செயல்பட வைத்து ஒலி பரப்ப வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.