Loading...
"பூமிக்கு சம்பந்தமே இல்லாத அமிலங்கள்..." அமெரிக்க வீட்டில் விழுந்த விண்கல்லில் இருந்த விசித்திர ரகசியம்! நாசா விஞ்ஞானிகள் தகவல்
விஞ்ஞானிகளை அதிரவைத்த விசித்திர ஏலியன் அமினோ அமிலங்கள்

"பூமிக்கு சம்பந்தமே இல்லாத அமிலங்கள்..." அமெரிக்க வீட்டில் விழுந்த விண்கல்லில் இருந்த விசித்திர ரகசியம்! நாசா விஞ்ஞானிகள் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 16, 2026
07:38 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பரோ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறை கூரையைத் துளைத்துக் கொண்டு ஒரு கிலோவிற்கும் அதிக எடையுள்ள விண்கல் ஒன்று விழுந்தது. பகல் நேரத்தில் மணிக்கு 32,000 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த இந்த விண்வெளிப் பாறை, நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி வான்பரப்பில் பெரும் ஒளிப்பிழம்பாகத் தோன்றி பயங்கர ஒலியையும் ஏற்படுத்தியது. தற்பொழுது இந்த விண்கல் குறித்து சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் ஒட்டுமொத்த அறிவியல் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

ஏலியன்

விண்கல்லில் கண்டறியப்பட்ட அரிய ஏலியன் அமினோ அமிலங்கள்

நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் டேனி கிளாசின் தலைமையிலான குழு இந்த விண்கல்லை விரிவாக ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின் போது, விண்கல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட நீர்மக் கலவையில் புரதங்களின் அடிப்படை கட்டுமானத் தொகுதியான அமினோ அமிலங்களின் சிக்கலான அடுக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த விண்கல்லில் கண்டறியப்பட்ட பெரும்பாலான அமினோ அமிலங்கள் பூமியில் உள்ள எந்தவொரு உயிரினத்திலும் இல்லாத, இயற்கையிலேயே பூமியில் காணப்படாத முற்றிலும் வேற்றுக்கிரக அல்லது அண்டவெளி மூலக்கூறுகள் ஆகும்.

விசித்திர விண்கல்

மகா விசித்திரமான 'சிஎம் 1/2' விண்கல் வகை

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த விண்கல் 'சிஎம்-வகை கார்பனேசியஸ் சோண்ட்ரைட்' (CM-type carbonaceous chondrite) என்ற அரிய பிரிவை சேர்ந்ததாகும்.

விண்வெளியில் உள்ள பெரிய சிறுகோள்களில் தண்ணீர் எந்த அளவிற்கு அதன் வேதியியல் கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளது என்பதைப் பொறுத்து இவை வகைப்படுத்தப்படுகின்றன.

இந்த ஹில்ஸ்பரோ விண்கல்லானது சிஎம்1 மற்றும் சிஎம்2 ஆகிய இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட ஒரு அரிய இடைநிலை (CM1/2) பாறையாகும்.

பூமியில் விழும்போதே நேரடியாக மனிதர்களால் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும் முதலாவது அரிய பரிசுத்தமான விண்கல் மாதிரி இதுவே ஆகும்.

ADVERTISEMENT

பூமி

பூமிக்குத் தண்ணீர் மற்றும் உயிரினங்கள் வந்த பின்னணி

இந்த விண்கல்லில் மிக அதிக அளவில் சோடியம் மற்றும் விண்வெளி உப்பு நீரின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பட்டையில் ஏற்பட்ட ஒரு பெரிய மோதலால் இந்த விண்கல் பிரிந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் இருந்த நீர் ஆவியானபோது, அது விட்டுச் சென்ற செறிவூட்டப்பட்ட உப்பு தாதுக்கள் தான் உயிரினங்கள் தோன்றுவதற்குத் தேவையான மூலக்கூறுகளை உருவாக்கியுள்ளன.

இதன் மூலம், ஆரம்பகால பூமியில் விண்கற்கள் மோதியதன் மூலமாகவே உயிரினங்கள் உருவாவதற்கான கரிமப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மூலக்கூறுகள் விண்வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டன என்ற கோட்பாட்டிற்கு இது வலுவான ஆதாரமாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

ஆராய்ச்சி

வீட்டு உரிமையாளர்களின் சாதுரியமான செயலால் சாத்தியமான ஆராய்ச்சி

இந்த அரிய கண்டுபிடிப்பு சாத்தியமானதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்களின் சாதுரியமான செயல்பாடே முக்கியக் காரணமாகும்.

விண்கல் விழுந்த உடனே, அவர்கள் கைகளில் பாதுகாப்பு உறைகளை அணிந்து, அலுமினியம் ஃபாயில் மற்றும் கண்ணாடி ஜாடிகளில் அதன் துகள்களைப் பத்திரப்படுத்தினர்.

மேலும் அன்றைய தினம் மழை பெய்வதற்கு முன்பாகவே தங்களது வீட்டின் கூரையை மூடிவிட்டனர்.

இந்த விண்கல் ஒரு பஞ்சு போன்ற நுண்துளை அமைப்பைக் கொண்டதால், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது.

மழைநீரோ அல்லது மனிதர்களின் கைகளோ நேரடியாகப் படாததால், பூமியின் அசுத்தங்கள் எதுவும் கலக்காமல் விண்வெளியின் அசல் வேதியியல் கட்டமைப்பை அப்படியே விஞ்ஞானிகளால் கண்டறிய முடிந்தது.

காலப் பெட்டகம்

அண்டவெளியின் காலப் பெட்டகம்

நாசாவின் பென்னு மற்றும் ஜப்பானின் ரியுகு ஆகிய சிறுகோள்களில் இருந்து விண்கலங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட மாதிரிகளை விடவும் இந்த விண்கல்லில் உள்ள அமினோ அமிலங்கள் அதிக பன்முகத்தன்மை கொண்டவையாக உள்ளன.

தற்பொழுது இந்த அரிய விண்கல்லின் துண்டுகள் நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காகவும் மேலதிக ஆராய்ச்சிக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

கோடிக்கணக்கான ஆண்டுகள் விண்வெளியில் பயணித்துத் தங்களது படுக்கையறையில் விழுந்த இந்த விண்கல், பூமியின் தோற்றம் குறித்த அறிவியல் ஆய்வுக்கு உதவியதை நினைத்து அதன் உரிமையாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT