'மெட்டா கனெக்ட்' நிகழ்வில் புதிய சாட்பாட்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மெட்டா, என்ன ஸ்பெஷல்?
கடந்த ஆண்டு வரை வெறும், கேள்வி பதில் தொழில்நுட்பமாக மட்டுமே இருந்த சாட்பாட்கள் தற்போது வேறொரு வடிவத்தை அடைந்திருக்கின்றன. அதற்கு மிக முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சாட்பாட்கள், இன்று பல்வேறு வகையிலும் பயனர்களுக்கு உதவத் தொடங்கியிருக்கின்றன. இன்னும் சொல்லபோனால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் முகமாகவே சாட்பாட்கள் பார்க்கபடுகின்றன எனக் கூறினால் அது மிகையாகாது. கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஓபன்ஏஐ என பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சாட்பாட்களை வெளியிட்ட நிலையில், தற்போது மெட்டாவும் அந்தக் களத்தில் குதிக்கவிருக்கிறது. ஆம், வரும் செப்டம்பர்-27ல் தொடங்கும் 'மெட்டா கனெக்ட்' நிகழ்வில் புதிய சாட்பாட்களை வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
புதிய சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் மெட்டா:
செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய சாட்பாட்டை மிகத் தாமதமாக அறிமுகப்படுத்துகிறது மெட்டா. மற்ற நிறுவனங்கள் வழங்கும் அதே சேவையை மெட்டாவும் வழங்கினால், அதிலென்ன சிறப்பிருக்கிறது. எனவே, சாட்பாட் சேவையை, பயன்பாட்டை தங்களது புதிய அறிமுகத்தின் மூலம் அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறது மெட்டா. 'Gen AI Personas' என தங்களது புதிய சாட்பாட் வசதியை குறிப்பிடுகிறகு மெட்டா. இந்த வசதியானது தற்போது மெட்டா நிறுவனத்திற்குள்ளேயே, மெட்டா ஊழியர்களிடையே சோதனை பயன்பாட்டில் இருக்கிறது. தங்களுடைய வருடாந்திர நிகழ்வான 'மெட்டா கனெக்ட்' நிகழ்வின் மூலம் இந்தப் புதிய சாட்பாட் வசதியை பொதுப் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
என்ன வகையான சாட்பாட்டை அறிமுகப்படுத்துகிறது மெட்டா?
மெட்டா நிறுவனமானது ஒன்றல்ல, இரண்டல்ல பல்வேறு வகையான சாட்பாட்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது. ஒவ்வொன்றும், ஒவ்வொறு குணாதிசயத்தைக் கொண்டிருக்கவிருக்கிறது. சீரியஸான டிஸ்கஷன்களுக்கு சீரியஸான சாட்பாட், காமெடியாக பதிலளிக்கக்கூடிய சாட்பாட் என தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட சாட்பாட்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுவரை தேவைக்கு மட்டும் பயன்பட்டு வந்த சாட்பாட்டை இனி நாம் பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்த முடியும். மேலும், பிரபலங்கள் தங்களது விசிறிகளுக்காவே தனிப்பட்ட சாட்பாட்டை உருவாக்கிக் கொள்ளும் வசதியையும் அளிக்கவிருக்கிறது மெட்டா. இதுதவிர, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என தங்களது தளங்களுக்கு, அந்தந்த தளங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட குணாதியசயங்களைக் கொண்ட சாட்பாட்களை வடிவமைத்திருக்கிறதாம் அந்நிறுவனம்.