போலி தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமா மெட்டா?
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் முக்கிய பிரச்சினையாக வளர்ந்திருப்பது, போலி தகவல் பரவல் மற்றும் பரப்பல் தான். சாதாரண நேரங்களைவிட, தேர்தல் சமையங்களில் இந்த போலி தகவல் பரவல் அதிகரிப்பதோடு, சமூகத்தில் அதனால் ஏற்படும் தாக்கமும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இந்நிலையில், தங்களுடைய தளங்களில் போலி தகவல் பரவல் மட்டுமின்றி, போலி கணக்குகள் உருாக்கம் தொடர்பான புதிய பிரச்சினை ஒன்றையும் எதிர்கொண்டு வருகிறது மெட்டா. சீனாவில், அமெரிக்கர்களின் பெயரில் ஆயிரக்கணக்கான போலி சமூக வலைத்தளக் கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் போலியான தகவல்கள் பரப்பப்படுவது அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கணக்குகளை முடக்கிய மெட்டா:
அப்படி அமெரிக்கர்களின் பெயரில் உருவாக்கப்படும் கணக்குகளானது, போலியான கணக்கு என்பதைக் கண்டறிய முடியாத வகையிலான பதிவுகளையும் இட்டு வருகின்றன. தற்போது அப்படி சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த 4,800 போலி கணக்குகளை முடக்கியிருக்கிறது மெட்டா. மேலும், இந்த கணக்குகளுக்கும் சீன அரசுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் நிலையில், அதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் உருவாக்கப்படும் கணக்குகள் நேரடியாக தவறான தகவல்களைப் பரப்பாமல், எக்ஸ் தளத்திலிருந்து அது தொடர்பான இணைப்புகளை மட்டும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையை விரைவில் களைய வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் களையெடுக்கப்பட வேண்டிய பிரச்சினை:
இந்தியாவிலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இதே போன்ற போலி தகவல் பரவல் என்பது இங்கும் பெரிய பிரச்சினையாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், மேற்கூறிய அமெரிக்க தோல் போர்த்திய சில கணக்குகள், இந்திய பெயர்களுக்கு மாற்றப்பட்டு சீனாவிற்கு ஆதரவான கருத்துக்களைப் பகிர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இது போன்ற போலி தகவல் பரவல் மற்றும் போலி கணக்குகள் பிரச்சினை மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டிய தேவை மிக அதிகமாகவே எழுந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான தகவல்கள் சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் அந்நிறுனங்களுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.