மெட்டாவெர்ஸ் தொடர்பான பிரிவில் புதிய பணிநீக்க நடவடிக்கையில் மெட்டா
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான மெட்டா, இந்த ஆண்டு தொடங்கத்திலிருந்து இதுவரை தங்கள் நிறுவனத்திலிருந்து 21,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு பணிநீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மெட்டா என்ற பெயர் மாற்றத்திற்கு காரணமான மெட்டாவெர்ஸ் பயன்பாட்டினை மேம்படுத்தும் வகையிலான AR கருவிகளை உருவாக்க ரியாலிட்டி லேப்ஸ் என்ற தனிப் பிரிவு ஒன்றை வைத்திருக்கிறது அந்நிறுவனம்.
அந்தப் பிரிவில் பிரத்தியேக சிலிக்கான் தயாரிக்கும் குழுவிலேயே இந்த சமீபத்திய பணிநீக்க நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஃபேஸ்புக் அஜைல் சிலிக்கான் டீம் எனக் குறிப்பிடப்படும் FAST பிரிவிலேயே தற்போது பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
மெட்டா
ஏன் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது மெட்டா?
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மெட்டாவெர்ஸ் உட்கட்டமைப்பு கருவிகளை உருவாக்கும் பிரிவானது சமீப காலத்தில் பல்வேறு தடைக்கற்களைச் சந்தித்து வருகிறது.
அந்தப் பிரிவை வழிநடத்தி வந்த மூத்த நிர்வாகியும் கடந்த வாரம் பணியிலிருந்து விலக, மேலும் பல தடைகளை சந்தித்து வருகிறது மெட்டா.
ரியாலிட்டி லேப்ஸின் இந்த மெட்டாவெர்ஸ் பிரிவுக்கே அதிகம் செலவு செய்கிறது மெட்டா. எனவே, செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாகவும் மெட்டாவின் இந்த சமீபத்திய பணிநீக்க நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
600 ஊழியர்களை வரை பணிபுரியும் FAST பிரிவில் எத்தனை ஊழியர்களை மெட்டா பணிநீக்கம் செய்யவிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் இன்னும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.