
த்ரெட்ஸ் செயலியில் DM செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது மெட்டா
செய்தி முன்னோட்டம்
மெட்டா தனது த்ரெட்ஸ் செயலியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நேரடி மெசேஜ் அனுப்புதல் (DM) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, எக்ஸ் தளத்திற்கு ஒரு வலுவான மாற்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு அதன் செயல்பாட்டை விரிவுபடுத்துகிறது. இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி ஜூலை 2025 முதல், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்கள் இப்போது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வெப் வெர்ஷன்களில் த்ரெட்ஸ் மூலம் தனிப்பட்ட ஒருவருக்கு ஒருவர் செய்திகளை அனுப்பலாம். 2023 ஆம் ஆண்டு த்ரெட்ஸ் அறிமுகமானதிலிருந்து DMகளைச் சேர்க்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
பயன்பாடு
DM அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி
DMகளை பயன்படுத்த, பயனர்கள் த்ரெட்ஸின் மேல்-வலது மூலையில் உள்ள என்வலப் ஐகானை கிளிக் செய்து, த்ரெட்ஸ் மூலமாகவோ அல்லது இன்ஸ்டாகிராம் மூலமாகவோ நேரடியாக மியூச்சுவல் ஃபாலோயர்களுடன் டெக்ஸ்ட் அடிப்படையிலான உரையாடல்களைகளைத் தொடங்கலாம். இப்போதைக்கு, இந்த அம்சம் டெக்ஸ்ட் மெசேஜ், ஈமோஜி ரியாக்ஸன்ஸ், ஸ்பேம் ரிப்போர்ட் மற்றும் முடக்கு விருப்பங்கள் போன்ற அடிப்படை மெசேஜிங் கருவிகளை வழங்குகிறது. குழு அரட்டைகள், பின்தொடர்பவர்கள் அல்லாதவர்களிடமிருந்து வரும் மெசேஜ் கோரிக்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்பாக்ஸ் ஃபில்டர்கள் போன்ற மேம்பட்ட அம்சங்கள் அடுத்தடுத்த கட்டங்களாக வெளியிடப்படும் என்பதை மெட்டா உறுதிப்படுத்தியது. இருப்பினும், திரெட்ஸ் DMகள் தற்போது எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷனைக் கொண்டிருக்கவில்லை என்பதால் இந்த அம்சம் தனியுரிமை ஆதரவாளர்களிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது.