'Llama 2' லாங்குவேஜ் மாடலை ஓபன் சோர்சாக வெளியிட்டுள்ளது மெட்டா
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் டெக்ஸ்ட்-டூ-இமேஜ் மற்றும் இமேஜ்-டூ-டெக்ஸ்ட் என இரு வகையிலும் பயன்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவுக் கருவியான கேமிலியான் (CM3leon) என்ற கருவியை வெளியிட்டது மெட்டா.
தற்போது சாட்ஜிபிடி, பார்டு போன்ற ஜெனரேட்டிவ் AI கருவிகளின் செயல்பாட்டிற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய லாங்குவேஜ் மாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது மெட்டா.
ஓபன் ஏஐ மற்றும் கூகுளைப் போல ஒரு லாங்குவேஜ் மாடலை அடிப்படையாகக் கொண்ட AI கருவிகளை நேரடியாக வெளியிடாமல், 'Llama 2' என்ற லாங்குவேஜ் மாடலை மட்டும் தற்போது மேம்படுத்தி இலவசமாக, ஓபன் சோர்சாக வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
அப்படியென்றால், ப்ரோகிராமர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை அனைவரும் இந்த லாங்குவேஜ் மாடலை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மெட்டா
மார்க் ஸூக்கர்பெர்க் கூறுவது என்ன?
இந்த புதிய Llama 2 லாங்குவேஜ் மாடலானது ஓபன் சோர்சாக வெளியிடப்பட்டிருப்பதால், இதனை மாற்றியமைப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான உரிமையயும் மற்றவர்களுக்கு அளித்திருக்கிறது மெட்டா.
ஓபன் ஏஐ மற்றும் கூகுளின் லாங்குவேஜ் மாடல்கள் தனிப்பட்ட முறையில், யாருக்கும் பயன்படுத்த அனுமதியின்றி மிகவும் ரகசியமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"ஓபன் சோர்ஸ் தான் புதுமைகளை கொண்டு வரும். மேலும், ஒரு மென்பொருள் ஓபன் சோர்சாக வெளியிடப்படும் போது, அதில் இருக்கும் பல குறைகள் நமக்குத் தெரியவரும்" எனத் தெரிவித்திருக்கிறார் மெட்டாவின் சிஇஓ மார்க் ஸூக்கர்பெர்க்.
எந்த வணிக நிறுவனமும், தங்கள் பயன்பாட்டிற்காக இந்த Llama 2 லாங்குவேஜ் மாடலை மைக்ரோசாஃப்டின் ஆசூர் கிளவுடு சேவை மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.