பேஸ்புக் நிறுவனத்தில் 7000 பேர் மீண்டும் பணிநீக்கம்! என்ன நடக்கிறது?
உலகில் உள்ள பல நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் சமீபத்தில், அதன் செலவு குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 11,000 பேரை பணி நீக்கம் செய்தது. அதன்பின்னர், தற்போது நடப்பு ஆண்டும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மெட்டா தெரிவித்து இருந்தது. இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் அதன் 10 சதவீத ஊழியர்களான, 7000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த ஊழியர்கள் தாங்களாகவே வெளியேற வேண்டும் என மறைமுகமாக இந்த கருத்துக்கணிப்பு செய்தியை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் 7000 பேரை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்
இதனால், பலர் வேறு நிறுவனங்களில் வேலை தேடும் பணியை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சரியாக ரேட்டிங் பெறாத ஊழியர்கள் தாங்களாக வெளியேறவில்லை என்றால் மீண்டும் ஒரு வேலைநீக்க நடவடிக்கை இருக்கும் என பேஸ்புக் நிறுவனத்தின் முன்னணி அதிகாரி ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் திறமை மிகுந்த ஊழியர்கள் மட்டுமே தேவை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால், ரேட்டிங்கில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் படிப்படியாக வெளியேறி வர வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு வெளியேறவிட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.