புதிய AI உருவாக்கக் கருவிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் மெட்டா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மெட்டா கனெக்ட் நிகழ்வில் பல்வேறு செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது மெட்டா. அவற்றுள் புகைப்பட உருவாக்க AI கருவியான Emu-வையும் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். இந்த Emu-வை புகைப்பட உருவாக்க AI கருவிகளுக்கான அடிப்படை மாடல் எனக் குறிப்பிட்டிருந்தது மெட்டா. தற்போது 'Emu வீடியோ' மற்றும் 'Emu எடிட்' ஆகிய மேலும் இரண்டு செயற்கை நுண்ணறிவு உருவாக்கக் கருவிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இவற்றுள் Emu வீடியோ கருவியை, கட்டளைகள் (Prompts) மூலம் காணொளிகளை உருவாக்கம் வகையிலும், Emu எடிட் கருவியை, கட்டளைகள் மூலம் புகைப்படங்களை எடிட் செய்யும் வகையிலும் உருவாக்கியிருக்கிறது மெட்டா.
மெட்டாவின் புதிய AI கருவிகளின் பயன்பாடு:
கட்டளைகளைக் கொண்டு புகைப்படங்களை உருவாக்கும் AI கருவிகளை மட்டுமே தற்போது வரை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. கட்டளைகளைக் கொண்டு நேரடியாக காணொளிகளை உருவாக்குவது சற்று சிரமம் தான். எனவே, இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றி கட்டளைகள் மூலம் காணொளிகளை உருவாக்குகிறது மெட்டாவின் புதிய Emu வீடியோ AI கருவி. அதன்படி, முதலில் Emu வீடியோ கருவியைப் பயன்படுத்தி கட்டளைகள் மூலமாக நமது காணொளிக்கான புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், நாம் உருவாக்கியிருக்கும் புகைப்படங்களுடன், நாம் உருவாக்க விரும்பும் காணொளி எப்படி அமைய வேண்டும் என்பதனை கட்டளையாகக் கொடுக்க வேண்டும். முந்தைய புகைப்படங்களையும், நமது கட்டளையையும் இணைந்து புதிய காணொளி ஒன்றை Emu வீடியோ கருவி நமக்கு உருவாக்கிக் கொடுக்கும்.
மெட்டாவின் Emu எடிட்:
Emu எடிட் வசதியுடன் எந்தவொரு புகைப்படத்தையும் கட்டளைகள் மூலமே பயனாளர்களால் எடிட் செய்ய முடியும் வசதியை அளித்திருக்கிறது மெட்டா. கட்டளைகள் மூலம் புகைப்படங்களை உருவாக்கும் AI கருவிகளையே பெரும்பான்மையான தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. AI கருவியின் உதவியுடன் எடிட் செய்யும் வசதிகள் இன்னும் அறிமுகமாகவில்லை. அந்த வகையில் இந்த Emu எடிட் AI கருவியும் சந்தையில் புதிதுதான். நமது கட்டளைக்கு ஏற்ப குறிப்பிட்ட பகுதியை மட்டும் துல்லியமாக மாற்றிக் கொடுக்கும் வகையில் இந்தப் புதிய Emu எடிட் கருவியை வடிவமைத்திருப்பதாகத் மெட்டா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.